காசா,நவ.29- காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒவ்வொரு நாளும் சராசரியாக 150 லாரிகளில் மட்டுமே நிவாரணப்பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப் படுகின்றன. இது போதுமானதாக இல்லை என கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 7 துவங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதமாக காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி மனிதர்களே வாழ முடியாத நிலைக்கு காசாவை மாற்றிய பிறகு நவம்பர் 24 முதல் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலாக்கப் பட்டது.இந்த போர் நிறுத்தத்தின் போது ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேலிய பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன பெண்கள், குழந்தைகளும் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் 20 கைதிகளை ஹமாஸ் குழு விடுவிப்பதாக அறிவித்த பிறகு 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ரபா எல்லை வழியாக பாலஸ் தீனர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கிய 750 லாரிகள் காசாவிற்குள் நுழைந்துள்ளன. நாளொன்று க்கு சுமார் 150 லாரிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளை க்கு 200 லாரி உதவிப் பொருட்கள் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீரில் உப்பு தன்மையை நீக்கி குடிநீராக்கும் ஆலைகள் முதலியவற்றை இயக்க ஐநாஅமைப்பிற்கு அதிக எரிபொருள் தேவைப் படுகிறது. 2007 முதல் நிலம், கடல் மற்றும் வான்வழி என அனைத்து திசையிலும் பாலஸ் தீனர்களை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது.அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குத லுக்கு முன்பு வரை சராசரியாக ஒவ்வொரு நாளும் 500 லாரிகளில் உதவிப் பொருட்கள் காசாவிற்குள் வந்தன என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரமே, ஆக்ஸ்பாம் நிறுவனம் இந்த போர் இடைநிறுத்தத்தை “இரத்தம் ஒழுகும் காயத்திற்கு ஒரு சிறிய பிளாஸ்திரி ஒட்டப்பட்டுள்ளது “ என்று விமர்சித்திருந்தது.