இந்திய வரலாற்றில் முதன் முதலாக, இன்றைக்கு 88 வருடங்களுக்கு முன், 1936இல் வேலையின்மைக்கு எதிராக நெடிய பாதயாத்திரை நடைபெற்றது. அந்த யாத்திரைக்கு தலைமை ஏற்றவர்; “நான் என்றும் மக்கள் ஊழியனே!” என பிரகடனம் செய்த – அப்படியே வாழ்ந்து மறைந்த தோழர் ஏ.கே.கோபாலன். அந்த மாபெரும் கம்யூனிஸ்ட்டின் அடியொற்றி அவரின் பேரப்பிள்ளைகள்தாம் வேலையின்மைக்கு எதிராக இப்போது டிஒய்எப்ஐ சைக்கிள் பேரணி நடத்துகிறார்கள். 1935-36 காலக்கட்டத்தில் பெரும் நெருக்கடியில் தேசம் திணறியது. பீகார், கேரளா, மேற்கு வங்கம் எங்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், விவசாயிகள் போராட்டங்கள் என தகித்தது.
காங்கிரஸ் கட்சிக்குள் செயல்பட்ட காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இவற்றுக்கு தலைமை ஏற்று வழிகாட்டினர். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் முன்னணியில் இருந்தனர். இது காங்கிரசுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் அவர்கள் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை துவக்கினர். ஆயினும் போராட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெற்றன. கேரளாவில் பல இடங்களில் “வேலையில்லாதோர் சங்கம்” துவக்கப்பட்டு வேலையின்மைக்கு எதிராக பரவலாக பாத யாத்திரைகள் நடத்தப்பட்டன. கல்யாச்சேரியில் இருந்து ஓர் குழு தோழர் கே.பி.ஆர். கோபாலன் தலைமையில் புறப்பட்டு கூத்தப்பரம்பா வந்தடைந்தது. சப் கலெக்டர் அக்குழுவை வரவேற்று மனுவைப் பெற்றுக் கொண்டார். தன்னிடம் அதிகாரம் கிடையாது மதறாஸ் [சென்னை] சென்று பிரதம மந்திரியைப் பார்க்கச் சொன்னார். மதறாஸ் ராஜதானி முதல்வருக்கு அப்போது பிரதமர் என்றே பெயர். மலபார் முழுவதும் பாதயாத்திரைகள் நடந்தன. தோழர்கள் ஏ.கே.கோபாலன், சந்திரோத்து குஞ்சிராமன்,கே.பி.ஆர் கோபாலன் ஆகிய மூவரும் தலைமை ஏற்க பாதயாத்திரை ‘பட்டினி யாத்திரை’ எனும் பெயருடன் மதறாஸ் நோக்கிப் புறப்பட்டது.
“பட்டினி! பட்டினி! எங்கும் பட்டினி!” எனும் பாடலுடன் கேரள-தமிழக எல்லை வாளையாறு முதல் மதறாஸ் வரை சுமார் 650 மைல்கள் நடந்து வந்தனர். இன்று போல் வசதிகள் இல்லை. மருந்துப் பை, பயணப் பை சுமந்து நடந்தனர். 500 க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் நடத்தினர். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். காங்கிரஸ் கட்சித் தலைமை யாத்திரைக்கு ஆதரவு தர மறுத்தாலும்; காங்கிரஸ் தொண்டர்கள் தோள் கொடுத்தனர். காங்கிரஸ் தலைமையை மீறி சேலம் நகரசபை காங்கிரஸ் உறுப்பினர் மாதவியம்மாள் தலைமையில் நடைபெற்ற வரவேற்பில் ஆறாயிரம் பேர் பங்கேற்றனர்.
சென்னையிலும் பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது.
அந்த வரலாற்றின் தொடர்ச்சிதான் இன்றைய டிஒய்எப்ஐ சைக்கிள் பயணமும்.
தோழர்களே!
நாம் என்றும் எங்கும் மக்கள் ஊழியரே!
வெல்க உங்கள் பயணம்!