world

img

பிரிட்டனின் கெய்ன் நிறுவனத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்குக.... இந்திய அரசுக்கு சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு....

தி ஹேக்:
இந்திய அரசின் வரிவிதிப்புக்கு எதிரான வழக்கில் பிரிட்டனின் கெய்ன் எண்ணெய் நிறுவனத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-07 ஆம் ஆண்டு பிரி்ட்டனைச் சேர்ந்த கெய்ன் நிறுவனம் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ன் நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால்,இந்த பங்குகளை மாற்றிய வகையில் முதலீட்டு ஆதாயத்தை கெய்ன் இந்தியா அடைந்துள்ளதாகக் கூறி,வருமான வரித்துறை அந்த நிறுவனத்துக்கு ரூ.10,247 கோடி வரிவிதித்தது.  ஆனால், இந்த வரியைசெலுத்த கெய்ன் நிறுவனம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து வருமானவரி மேல்முறையீடு தீர்ப்பாயத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கில் கெய்ன் நிறுவனம் தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து  2011 ஆம் ஆண்டு கெய்ன் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது பெரும்பான்மையான பங்குகளை, வர்த்தகத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. கெய்ன் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வருமானவரித்துறை அனுமதிக்கவில்லை. மேலும், கெய்ன் இந்தியாவின் பங்குகளை முடக்கியும், அதன் ஈவுத்தொகையை முடக்கி வைத்தனர்.இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தி ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட தீர்ப்பில், “கெய்ன் நிறுவனத்துக்குரிய விவகாரம் வரிப் பிரச்சனை அல்ல, இது முதலீடு தொடர்பான விவகாரம். முந்தைய விவகாரங்களுக்கு சேர்த்து ரூ.10,274 கோடி வரிவிதிக்கும் இந்திய அரசின் கோரிக்கை என்பது, நியாயமான மற்றும்சமமாக நடத்தும் உறுதியை மீறுவதாகும்.  ஆதலால் கெய்ன் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.8 ஆயிரம் கோடியை இந்திய அரசு வழங்க வேண்டும்.அதுமட்டு மல்லாமல் வட்டி, செலுத்தப்பட்ட வரியைதிருப்பி அளிக்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்ட பங்குகளையும் விடுவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. கடந்த 3 மாதங்களில் இந்திய அரசுக்கு கிடைத்த இரண்டாவது தோல்வியாகும் இது. வோடஃபோன் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட பின்தேதியிட்ட விரிவிதிப்பை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் இந்திய அரசுக்கு சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது.