world

img

பெரும் பாய்ச்சலுக்கு தயாராகிறது வெனிசுலா

வாஷிங்டன், டிச.29- லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக அளவு பொருளாதார வளர்ச்சியை எட்டப்போகும் நாடாக வெனிசுலா இருக்கப் போகிறது என்று சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த அரசைக் கவிழ்க்க அமெரிக்காவின் ஆதரவுடன் பல்வேறு முயற்சிகள் நடந்தன. போட்டி அரசும் உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டி அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகாரம் அளித்தன. வெளிநாடுகளில் உள்ள வெனிசுலாவின் சொத்துக்களை போட்டி அரசின் வசம் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. இந்த அனைத்து சதி வேலைகளையும் வெனிசுலா மக்கள் ஆதரவுடன் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசு முறியடித்தது. தற்போது போட்டி அரசுக்கு ஆதரவு தந்த சில எதிர்க்கட்சிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளன. அமெரிக்கா மீது விழுந்த அழுத்தத்தால் எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள செவ்ரான் நிறுவனத்திற்கு அனுமதி தந்துள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவையும், அதன் நிலையும் அதிகரித்துள்ளதால் வெனிசுலாவில் நிலவி வந்த பணவீக்கம் கட்டுக்குள் வரும் நிலை உருவானது. இதனால் 2023 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளை, ஐ.எம்.எப். ஒருங்கிணைத்து ஒரு ஆய்வை செய்துள்ளது. அந்த ஆய்வின்படி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக அளவு பொருளாதார வளர்ச்சியை எட்டப்போகும் நாடாக வெனிசுலா இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. வரும் ஆண்டில் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருக்கும். அதே வேளையில், வெனிசுலாவின் வளர்ச்சி 10 விழுக்காடு அளவுக்கு இருக்கப் போகிறது என்று ஐ.எம்.எப். கணிப்பு தெரிவிக்கிறது. நடப்பாண்டில், 12 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டிய வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் கிட்டத்தட்ட 6.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. வரும் ஆண்டிற்கான கணிப்பான 10 விழுக்காட்டையும் தாண்டியே வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடி, ஈரான் மீதான எதிர்ப்பு நிலைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் வெனிசுலா பக்கமே பல நாடுகள் திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. திரும்பும் நிறுவனங்கள் வெனிசுலாவில் தனது செயல்பாடுகளை செவ்ரான் மீண்டும் தொடங்கியுள்ளது

போன்று எனி மற்றும் ரெப்சால் உள்ளிட்ட பெரு நிறுவனங்களும் விரைவில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ளவுள்ளன. வெனிசுலாவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதியை இந்த நிறுவனங்கள் செய்யத் தொடங்கினால், ஏற்றுமதியின் அளவு பெருமளவில் அதிகமாகவே இருக்கப் போகிறது. எண்ணெய்ச் சந்தையைப் பெருமளவில் நம்பியிருக்கும் வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சியும் விரைவடையும். ஒரு நாளைக்கு பத்து லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி என்பதை வெனிசுலா அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் நிறைவிற்குள் இதை அடைய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த இலக்கை அவர்கள் அடையும் பட்சத்தில் கணிக்கப்பட்டதை விட வேகமாக அந்நாட்டின் பொருளாதாரம் வளரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். லத்தீன் அமெரிக்காவில் உள்ள மற்ற இடதுசாரி அரசுகளுக்கு வெனிசுலாவின் வளர்ச்சி உத்வேகமளிக்கப் போகிறது.