world

ஊதிய உயர்வு தாருங்கள் - மதகுருமார்கள் கோரிக்கை

லண்டன், ஜூன் 24- வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து தேவாலயங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் தங்களது ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் பணியாற்றும் மதகுருமார்கள் மற்றும் அலுவலர்கள் தொழிற்சங்கத்திலும் இணைந்திருக்கிறார்கள். தேவாலயங்களின் வரலாற்றிலேயே முதன்முறையாகத் தங்களால் விலைவாசி உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாததால்  ஊதிய உயர்வு தர வேண்டும் என்று கோரியுள்ளனர். இவர்கள் இணைந்துள்ள தொழிற்சங்கத்தில் சுமார் 2 ஆயிரம் குருமார்கள் மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தற்போதுள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப ஒன்பது விழுக்காடு ஊதிய உயர்வைத் தாருங்கள் என்று தொழிற்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 40 ஆண்டுக் காலத்தில் இல்லாத விலைவாசி உயர்வு தற்போது இருப்பதால் இத்தகைய கோரிக்கை தவிர்க்க இயலாது என்று தேவாலயக் குழுவிடம் தொழிற்சங்கம் தெரிவித்திருக்கிறது. சுமார் 20 விழுக்காடு  மதகுருமார்களின் குடும்பங்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. தங்கள் கோரிக்கை குறித்துப் பேசிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷாரோன் கிரகாம், ‘‘வங்கிகளில் கோடி, கோடியாகக் குவித்து வைத்திருக்கிறார்கள். சிறிய ஊதிய உயர்வை அவர்களால் தர முடியும்’’ என்று தெரிவித்தார். தங்களுக்காக தொழிற்சங்கம் போராடிக் கொண்டிருக்கிறது  என்றும், அதன் பின்னால் தாங்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டிருக்கிறோம் என்றும் சில மதகுருமார்கள் குறிப்பிட்டுள்ளனர்.