world

img

அமெரிக்கக் காவல்துறையால் 700 பேர் படுகொலை மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் அச்சம்

கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்கக் காவல்துறையினரின் வன்முறைக்கு 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேப்பிங் போலீஸ் வயலென்ஸ் என்ற அமைப்பின் புள்ளிவிபரங்கள் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தருகின்றன. இந்த அமைப்பின் கணிப்பின்படி, மேலும் 440 பேர் நடப்பாண்டில் காவல்துறையினரின் வன்முறைக்குப் பலியாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறையால் கொல்லப்பட்டவர்களில், மூன்றில் ஒருவர்தான் வன்முறை சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார். வன்முறை சாராத குற்றங்கள்தான் மற்ற இருவர் மீது சாட்டப்பட்டிருந்தன. கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறையால் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும், பாதுகாப்பிலிருந்து தப்பி ஓட முயற்சித்தால் கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இருந்து சேகரிப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி ஆப்பிரிக்க வம்சாவளியினரின் எண்ணிக்கை மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிகமான இருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே, 2021 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களைவிட நடப்பாண்டில் அதிகமானோர் காவல்துறையின் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே காவல்துறையின் வன்முறைக்கு யாரும் பலியாகாமல் இருந்திருக்கிறார்கள்.

பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, ஜூலை 16 ஆம் தேதி வரையில் காவல்துறையின் வன்முறைக்கு 614 பேர் பலியாகியிருக்கிறார்கள். இரண்டு புள்ளிவிபரங்களின்படி, நடப்பாண்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒபாமா, டிரம்ப், தற்போது ஜோ பைடன் என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியோ அல்லது குடியரசுக்கட்சியின் ஜனாதிபதியோ, யார் பதவியில் இருந்தாலும் இந்தக் கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. காவல்துறையினரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.

நியூயார்க் நகரத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 18 வயதுள்ள ரேமண்ட் சாலுய்சாண்ட் என்ற இளைஞரை டியோன் மிடில்டன்  என்ற காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றிருக்கிறார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில், தன் மீது அந்த இளைஞர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கியால் தாக்கியதாக அதிகாரி சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் அந்த இளைஞர் வைத்திருந்த தண்ணீர்த் துப்பாக்கி, விளையாடுவதற்கான பயன்படுத்துப்படுவதாகும். இதுபோன்ற பல சம்பவங்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நிகழ்ந்துள்ளன.