what-they-told

img

கோஹினூர் திரும்பி வருமா?

உலகம் முழுவதும் பல்வேறு வைரங்கள் இருந்தாலும் கோஹினூருக்கென்று தனியிடம் இருந்தே வருகிறது. ஆனால், உலகத்திலேயே பெரிய வைரமாக அது இல்லை. அதை விடப் பல வைரங்கள் அளவில் பெரியதாக இருக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இந்த வைரத்திற்குப் பின்னால், பல்வேறு கதைகள் பின்னப்பட்டுள்ளன. ஆனால், வரலாற்றுப்படி, காகதியா மன்னர்களின் கஜானாவுக்குள் இருந்த இந்த வைரத்தை 1310 ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர் எடுத்துச் செல்கிறார். இருந்தாலும், அதை எந்த சுல்தானும் அணிந்து கொண்டதாகத் தகவல்கள் இல்லை. ஒரு கதை நிலவுகிறது. அதை சிலர் அலாவுதீன் கில்ஜிக்கும், சிலர் முகம்மது பின் துக்ளக்குக்கும் பொருத்திக் கொள்கிறார்கள். இந்த வைரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட தில்லி சுல்தான் அதன் ஒளியைப் பார்த்து மலைத்துப் போகிறார். அமைச்சரிடம் கேட்கிறார், “இதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்?” அமைச்சரரோ நேரடியாகப் பதில் சொல்லாமல், சுற்றி வளைக்கிறார். “நமது நாட்டில் உள்ள பெரிய பலசாலியை வரச் சொல்லுங்கள். அவரது கைகளில் ஐந்து கற்களைக் கொடுப்போம். நான்கு திசைகளிலும் நான்கு கற்களை எறியட்டும். ஐந்தாவது கல்லை விண்ணை நோக்கி எறியட்டும். இந்தக் கற்கள் சென்றடைந்த தொலைவை வைத்து, அதன் பரப்பளவை அளந்து, அது முழுவதும் தங்கத்தால் நிரப்புங்கள். அவ்வளவு மதிப்பு இந்த வைர்த்திற்கு இருக்கும்” என்றார். தில்லி சுல்தானின் கைகள் நடுங்கின. “இதை உள்ளேயே வைத்து விடும்” என்று சொல்லி விடுகிறார்.

இப்படியாகக் கதை போகிறது. இதன்பிறகு முகலாயர்கள்தான் வைரத்தை வெளியில் எடுக்கிறார்கள்.  முகலாயர்கள் பலவீனம் அடைந்தபிறகு, 1839ல் நாதிர் ஷாவால் பாரசீகம் செல்கிறது. அவர்தான் இந்த வைரத்திற்கு “கோஹினூர்” என்ற பெயர் சூட்டியவராவார். பின்னர் பல கைகள் மாறி, பஞ்சாப் அரசரிடமிருந்து ஆங்கிலேயர் பெறுகிறார்கள். ராணிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்போதிருந்து கோஹினூர் லண்டனில் உள்ளது. கோஹினூர் வைரத்திற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. உச்சநீதிமன்றத்தில் கோஹினூரைத் திரும்பக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய வழக்கில், அது அரசு ரீதியில் பரிசாகக் கொடுக்கப்பட்டது என்று ஒன்றிய அரசு சொன்னதால், 2017 ஆம் ஆண்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்தாலும், விவாதங்கள் முற்றுப் பெறவில்லை. - க.கணேஷ்

;