what-they-told

img

இந்நாள் ஜுன் 08 இதற்கு முன்னால்

1967 - அரபு நாடுகளுக்கெதிரான ஆறுநாள் போரின்போது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான லிபர்ட்டி என்னும் ஆய்வுக் கப்பலை பன்னாட்டுக் கடற்பரப்பிலிருந்தபோது இஸ்ரேல் தாக்கியது. போரில் நடுநிலை வகித்த அமெரிக்காவின் கப்பல் என்பது தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்ததுடன், அமெரிக்கக் கொடியும் முழுக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. ஆனாலும் இஸ்ரேலிய விமானப்படை விமானங்களும், கடற்படையின் டார்ப்பீடோ படகுகளும் இக்கப்பலைத் தாக்கின. அமெரிக்கக் கப்பலின் தொலைத்தொடர்பு சாதனங்களும் இஸ்ரேலியப் படைகளால் முடக்கப்பட்டிருந்தன. சுமார் இரண்டு மணிநேரத்திற்கு நீடித்த தாக்குதலில் எந்திரத் துப்பாக்கிச்சூடு, பீரங்கிக் குண்டுவீச்சு ஆகியவற்றுடன் சிறிய நபாம் வேதிம குண்டுகளும் வீசப்பட்டதில் 34 பேர் உயிரிழந்ததுடன், 171 பேர் படுகாயமுற்றனர். கப்பல் மூழ்கிவிடலாம் என்பதால், உயிர்காக்கும் படகுகளில் தப்பிக்க முயன்றபோது அவற்றையும் இஸ்ரேல் கடற்படை அழித்தது. பதினாறு மணிநேரத்திற்குப்பின்பே மற்றொரு அமெரிக்கக் கப்பல் உதவிக்கு வந்தது. இதற்கு ஆறு மணிநேரம் முன்பே ஒரு சோவியத் கப்பல் உதவ முன்வந்தபோதும், உதவி ஏற்கப்படவில்லை. எகிப்துக் கப்பல் என்று எண்ணித் தாக்கிவிட்டதாக இஸ்ரேல் பின்னர் அறிவித்ததை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. இரண்டு வாரங்களில் விசாரணை முடிக்கப்பட்டு இதைப்பற்றிய ஆவணங்கள் தடைசெய்யப்பட்டதுடன், லிபர்ட்டியிலிருந்து உயிர்பிழைத்தோரையும் பேச அனுமதிக்கவில்லை. இதுவரை அமெரிக்கக் கப்பல்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளில் பாராளுமன்ற விசாரணை மேற்கொள்ளப்படாத ஒரே நிகழ்வும் இதுதான். 1980இல் இரு மேலவை உறுப்பினர்கள் விசாரணைக்கு முயற்சித்தபோதுகூட, பல மில்லியன் டாலர்களை இழப்பீடாக இஸ்ரேல் வழங்கியதாகக்கூறி அம்முயற்சி முடக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு மறுநாளே சிரியாவைத் தாக்கி கோலான் குன்றுகளை இஸரேல் கைப்பற்றியது. இதை லிபர்ட்டி கப்பல் முன்பே அறிந்துவிட்டதால், அதை அழிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. 1960களில் அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்கத்தடை விதிக்கப்பட்டிருந்தது. 1968 ஜனவரியில்தான், தடை விலக்கப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேல் தெரிந்தே தாக்கியதாக ஒப்புக்கொண்டால் ஆயுத வணிகத்தை நிறுத்தவேண்டியிருக்கும் என்பதற்காகவே அமெரிக்காவும் மறைத்ததாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப அடுத்த சில ஆண்டுகளில், 3 பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்கள் வாங்கி, அமெரிக்காவிடம் மிகஅதிக ஆயுதம் வாங்கிய நாடாக இஸ்ரேல் மாறியது.

;