1958 - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னோடியாக அமைந்த, பெனலக்ஸ் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் பெனலக்ஸ் பொருளாதார ஒன்றியம் தொடங்கப்பட்டது. பெல்ஜியம்(பெ), நெதர்லாந்து(ன), லக்சம்பர்க்(லகஸ்) ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான இது, அவற்றின் பெயர்களின் தொடக்க எழுத்துக்களைக்கொண்டு பெயரிடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நாட்டுக்கு வெளியிலிருக்க நேர்ந்த இந்நாடுகளின் பிரதிநிதிகள், 1944இல் லண்டனில் கூடி, லண்டன் சுங்க ஒப்பந்தம் என்பதில் கையெழுத்திட்டு, பெனலக்ஸ் சுங்க ஒன்றியத்தை உருவாக்கினர். சுங்க ஒன்றியம் என்பது, அதிலுள்ள நாடுகளுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி வரிகளின்றி, பொதுவான சுங்க வரியுடன், தடையற்ற வணிகத்துக்காக உருவாக்கப்படுவதாகும். இந்நாடுகளுக்கிடையே மனிதர்கள், சரக்குகள், சேவைகள் ஆகிய அனைத்தும் தடையின்றிச் செல்ல வழிவகுத்த இந்த லண்டன் ஒப்பந்தமே, இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தங்களில் முதலாவதாகும். சுங்க ஒன்றியம் 1948இல் நடைமுறைக்கு வந்தபின், 1955இல் பெனலக்ஸ் நாடாளுமன்றம் என்ற இம்மூன்று நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஆலோசனைக் குழு, பெல்ஜியத்தின் பாராளுமன்றத்தின் 21 உறுப்பினர்கள், நெதர்லாந்தின் 21, லக்சம்பர்கின் 7 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1958இல் உருவான பெனலக்ஸ் பொருளாதார ஒன்றியம், மூலதனம், தொழிலாளர்கள், சரக்குகள், சேவைகள் ஆகியவற்றின் தடையற்ற பரிமாற்றத்தை உறுதிசெய்து, பொருளாதார, நிதி, சமூகக் கொள்கைகளில் இந்நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. 26 ஐரோப்பிய நாடுகளிடையே கடவுச்சீட்டின் தேவையை ரத்து செய்து, அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய ஷெங்கன் பகுதி உருவாவதிலும், இந்த பெனலக்ஸ் முக்கியப் பங்காற்றியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள்தொகையில் 75 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கிறார்கள். இந்த நகரங்கள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பரவலாக இருந்தாலும், அதிக நகரங்கள் ஓரிடத்தில் இருப்பது பெனலக்ஸ் பகுதியில்தான் என்பது, இக்கூட்டமைப்பினால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குச் சான்றாகும். இதன் அறுபதாண்டுகள் நிறைவை 2018இல் கொண்டாடிய இவ்வொன்றியம், பெனலக்ஸ் இளைஞர் நாடாளுமன்றம் என்பதையும் உருவாக்கியுள்ளது. இந்நாடுகளில், எந்த நாட்டில் வழங்கப்படும் உயர்கல்விக்கான பட்டம், பட்டயம் முதலானவையும், ஒன்றியம் முழுவதும் ஏற்கப்படும் என்ற ஒப்பந்தத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே முதன்முறையாகச் செய்துள்ளது. பெனலக்ஸ் காவல்துறை என்ற பொதுவான காவல்துறைக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது!