what-they-told

img

சுதந்திரத்தின் 75 ஆண்டுகளும் பாலின நீதியும் - எம்.பி.ராஜேஷ் ,கேரள சட்டப்பேரவைத் தலைவர்

நாடு, சுதந்திரம் அடைந்த 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வரு கிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களு டன் போராடிய பெண்களுக்கு ஜனநாயக இந்தியாவில் போதுமான பிரதிநிதித்துவமும் பங்கும் கிடைத்ததா?  ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சி யின் ஒரு பகுதியாக வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் (மே 26,27) கேரள சட்டப்பேரவை யால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் தேசிய மாநாட்டில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஜான்சி ராணி லட்சுமிபாய் முதல் கேப்டன் லட்சுமி வரை பல சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூராமல் இந்திய  சுதந்திரப் போராட்ட வரலாறு முழுமையடையாது. சரோஜினி நாயுடு, அருணா ஆசப் அலி, கல்பனா தத்தா, மல்லு ஸ்வராஜ்யம் என பல போராளிகள் தங்கள் வாழ்வை சமுதாயத்திற்காக அர்ப்பணித்தவர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெண்களும் முக்கியப் பங்காற்றினர்.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில சட்டப் பேரவைகள் விரிவான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ஒன்றிய அரசும், மக்களவை சபாநாயகரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கேரள சட்டமன்றமும் பல்வேறு திட்டங்களை வகுத்தது. இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். தொற்றுநோய் காரண மாக பின்தொடர்தல் தாமதமானது. இப்போது பெண்களின் அரசியல் பங்கேற்பு, சட்டமன்றம் உள்ளிட்ட முடிவெடுக்கும் அமைப்பு களில் பங்கேற்பது போன்ற முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க விரிவான தேசிய மாநாடு ஒன்று கூட்டப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவிகிதம் உள்ள மாநிலம் கேரளம். எனவே, சமூக, நிர்வாகத்  துறைகளில் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த நிலை உள்ளது.  கடந்த 25 ஆண்டுகளாக, குடும்பஸ்ரீ அமைப்பு பெண்கள் அதிகார மளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது. மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களுக்கு சுதந்திரமும்  நியாயமும் சமமாக வழங்கப்பட்டதா? நாம் இன்னும் எவ்வளவு  தூரம் செல்ல வேண்டும் என்பதை ஆராய்ந்து பெண் உறுப்பினர் களின் மாநாட்டின் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பில் பெண்கள் பின்னடைவு

அரசமைப்புச் சட்டமும் பெண்களின் உரிமைகளும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, பெண்களின் உரிமைகளில் சட்டப்பூர்வமான ஓட்டைகள், முடிவெடுக்கும் அமைப்பு களில் குறைவான பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகிய நான்கு விசயங்கள் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம், சாதனைகள்  மற்றும் உரிமைகள் பெண்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப் பட்டதா என்ற கேள்வி மிகவும் பொருத்தமானது. கல்வியறிவு, கல்வி,  ஆயுட்காலம், மகப்பேறு இறப்பு விகிதத்தில் இந்தியப் பெண்கள்  இன்னும் பின்தங்கியே உள்ளனர். ஆனால் கேரளாவின் சித்திரம் வேறாக உள்ளது. பெண்களின் கல்வியறிவு 97.8 சதவிகிதம்  ஆகும். கல்வியில் பெண் குழந்தைகளின் பங்களிப்பு அதிகமாக  உள்ளது. உடல்நலம் தொடர்பான படிப்புகளில் பங்கேற்பு 80 சதவிகிதம் ஆகும். எம்பிபிஎஸ் மாணவர்களில் 66 சதவிகிதம் பேர் பெண்கள். வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பாடப்பிரிவு களில் 77 சதவிகித பங்கேற்பு உள்ளது. 72 சதவிகித ஆசிரியர்கள் பெண்கள். ஆனால், கேரளாவில் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு 26 சதவிகிதம் மட்டுமே.

அரசமைப்பு உரிமைகள் பெண்களுக்கு சமமாக கிடைக்கச் செய்வதில் நாடு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. குடி மகனின் அடிப்படை உரிமைகள் விசயத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. பல நிலைகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகளும், சொந்த விசயங்களை தேர்வு  செய்வதில் கருத்து சுதந்திரமும் மறுக்கப்படு கிறது. பாலியல் துன்புறுத்தல், வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறை மற்றும் பணியிட துன்புறுத்தல் உட்பட பல நிலைகளில் அவர்களுக்கு எதிராக உரிமைகள் மறுக்கப்படுகின்றன, அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன.

இன்னும் 145 ஆண்டுகள்

உலகப் பொருளாதார மன்றம் 156 நாடுகளால் தொகுக்கப்பட்ட உலக பாலின இடைவெளி அறிக்கை  (Global Gender Gap Report) 2021, உலக அரசியலில் பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 145.5 ஆண்டுகள் ஆகும் என்று கணித்துள்ளது. இந்த  156 நாடுகளில் உள்ள 35,500 நாடாளுமன்ற இடங்களில் பெண்கள்  26.1 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். இந்த நாடுகளில் உள்ள 3,400  அமைச்சர்களில் 22.6 சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள். 81 நாடு களில் பெண்கள் அரசுத் தலைவர்களாக ஆனதே இல்லை. இந்தியா வில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், பெண்கள் முன்னணியில் இருக்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா வும் ஒன்று. ஆனால், இந்த அறிக்கையின்படி இந்தியா 51ஆவது இடத்தில் உள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மிக முக்கியமான முன்நிபந்தனை, அரசியலிலும் சட்டமன்ற அரங்கிலும் அவர்களின் தகுதியான, பயனுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாகும். மக்களவையில் உள்ள 540 உறுப்பினர்களில் பெண்கள்  81 பேர் மட்டுமே. அதாவது 15 சதவிகிதம். மாநிலங்களவையில், 27 பேர்  மட்டுமே. பெண்களுக்கு இடஒதுக்கீடு இருப்பதால் மூன்றடுக்கு பஞ்சாயத்துகள் நல்ல நிலையில் உள்ளன. மொத்தமுள்ள 30  லட்சம் பிரதிநிதிகளில் 13 லட்சம் பேர் பெண்கள். 1993 இல் அர சமைப்பு சாசனத்தின் 73 மற்றும் 74 ஆவது பிரிவுகளில் செய்யப்பட்ட  திருத்தம் மூலம் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியதன் மூலம் இந்த மாற்றம் சாத்தியமானது. ஆனால், நாடாளு மன்றம், சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கு வதற்கான மசோதாவை மாநிலங்களவை மட்டுமே நிறைவேற்றி யது, மக்களவையில் தாக்கல் செய்வது கூட திட்டமிட்டு தடுக்கப் பட்டது. பெண்களுக்கு சமத்துவம், சமவாய்ப்பு, கண்ணியத்தை அர சமைப்பு உறுதியளிக்கிறது. இந்த உரிமைகள் பெண் சமூகம் முழு மைக்கும் உறுதி செய்யப்படும்போது மட்டுமே சுதந்திரம்முழுமைபெறும்.

கேரளாவில் அனைத்து துறைகளிலும் பெண்களின் இருப்பு வலுவானது, குறிப்பிடத்தக்கது. ஆனால் காலங்காலமாக இருந்து  வரும் ஆணாதிக்க சிந்தனைகள் மற்றும் செயல்களின் வேர்கள் இன்னும் பிடுங்கி எறியப்படவில்லை. சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய விழுமியங்கள் நிலவும் சமூகத்தில் தான் பாலின நீதியும், பாலின சமத்துவமும் இருக்க முடியும். பாலின சமத்துவம், பாலின நீதியை இலக்காகக் கொண்ட பெண் உறுப்பினர்களின் தேசிய மாநாடு, எதிர்கால கொள்கை உருவாக்கம் சட்டங்களை வழிநடத்தும் விவாதங்களுக்கான களமாக அமையும் என நம்பலாம்.

தேசாபிமானியிலிருந்து தமிழில் - சி.முருகேசன்

 

;