உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரேனா வைரஸ் இந்திய ஒன்றியத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மனித குலம் எப்படியாவது தப்பி பிழைக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தனித்திருக்க வேண்டும், தனி மனித இடைவெளி வேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனை சொல்கிற அரசு மக்களின் தேவையை உணர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக , அத்தியாவசிய அடிப்படை பொருட்களின் உற்பத்தி பாதிப்பு குறித்த எந்த அக்கறையும் கொண்டதாக மத்திய மாநில அரசுகளுக்கு இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.
இச்சூழலில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடந்த மாதம் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 25 நாட்களாக அனைத்து வகை தொழிற்சாலைகள் மூடப்பட்டது. தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். அதே நேரம் மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. இத்தகைய நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தி வரும் சானிடரி நாப்கினுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், ஊரடங்கு உத்தரவினை மே 3ம் தேதி வரை மத்திய அரசு நீடித்து உள்ளது. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின் உற்பத்தி முழுமையாக முடங்கியுள்ளதால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் தினமும் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 5 லட்சம் நாப்கின் உற்பத்தி ப ளிகள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 35 கோடி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாப்க்கின் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு என்பது ஒருபுறமும், கையிருப்பு உள்ள மூலப்பொருட்கள் முக கவசம் தயாரிப்பதற்கு மடைமாற்றம் செய்யப்படுவதும் இந்த உற்பத்தி பாதிப்பிற்கு பிரதான காரணமாய் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மருந்துகடைகளில் விற்பனைக்கு வந்த நாப்க்கின்கள் முழுமையாக விற்பனையான நிலையில் எந்த கடைகளிலும் நாப்க்கின் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சுகாதார நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அரசுகள் நாப்கின் தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற குரல் தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து மலிவு விலையில் எளிய முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்க கூடிய இயந்திரத்தை கண்டுபிடித்து உலகளவில் பிரபலமடைந்த , பத்மஸ்ரீ விருது பெற்ற பேட் மேன் அருணாச்சலம் முருகானந்தம் கூறுகையில், இந்தியாவில் 35 கோடி பெண்கள் நாப்கின் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 2 கோடி பெண்கள் நாப்கின் பயன்படுத்துகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக தினமும் 5 லட்சம் நாப்கின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மலிவு விலை நாப்கின் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் பெண்கள் நாப்கின் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தினமும் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 5 லட்சம் நாப்கின் உற்பத்தி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் நாப்கின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பின் காரணமாக நாப்கின் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை. கனடாவிலிருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு 25 டன் அளவிலான மூலப்பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மூலப்பொருட்களை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பலர் நாப்கின் பயன்படுத்தும் மூலப்பொருட்களை வைத்து மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாப்கின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணியை பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு நாப்கின் உற்பத்தி செய்ய சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். மூலப்பொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்த உற்பத்தி பணிக்கு மிகக்குறைந்த அளவிலான நபர்களே தேவைப்படுவர் . அவர்களை பணியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும். மருந்து கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு நாப்கின் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும். இது தொடர்பான அரசாணையை அரசு வெளியிட பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
(ந.நி).