பேசும் காச்சக்காரம்மன் – 7
காய்ச்சல் வந்த பிள்ளையை குளிப்பாட்டவா வேண்டாமா? அவர்களை வெந்நீர் வைத்து குளிப்பாட்டுவதா அல்லது குளிர்ந்த தண்ணீரை வைத்து துடைத்து எடுப்பதா? என்று பெற்றோர்களுக்கு எப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. தினந்தினம் தானே குளிக்கிறோம் என்பதால் குளித்தலும் ஆரோக்கியத்தை பேணக்கூடிய இயற்கை மருத்துவத்தின் ஒரு வழிதான் என்பதே நமக்கு மறந்து போய்விட்டது. அம்மை போட்டவுடன் 21ம்நாள் வேப்பிலை போட்டு தண்ணீரை ஊற்றுவதும், வயது வந்த பெண்ணிற்கு மஞ்சள் தண்ணீரில் குளிப்பாட்டுவதும்கூட ஒருவகை மூலிகை குளியல்தானே. ஆதலால் பெற்றோர்களே, குளியல் என்பது காய்ச்சல் காலத்தில் அவசியமான ஒன்றுதான். அதுசரி, அதென்ன காய்ச்சல் குளியல்? அதற்கும் காக்கா குளியலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாகவே வருகிறது அல்லவா. அதற்காகத்தான் ஒரு வரலாற்றுப் பாதைக்கு நாம் பொடி நடையாக நடந்துவிட்டு வர வேண்டியிருக்கிறது. சரி, வாருங்கள் போகலாமா..
உங்களுக்குத் தெரியுமா, நாம் வாழுகிற பூமிகூட தினந்தினம் சூரியக் குளியல் போட்டுக் கொண்டுத்தான் இருக்கிறது. சூரியனிடமிருந்து வருகிற வெப்பத்தை வாங்கியும் சிலவற்றை ஓசோன் படலம் வழியே திருப்பி அனுப்பியுமாக பூமியிலுள்ள ஜீவராசிகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு பூமிக்கு சூரிய வெப்பமும் தேவையானதுதான். ஆம், தாவரங்கள், விலங்குகள், பறவைகளென பல செல் உயிரிகளுக்கு சார்ஜ் ஏற்றப்பட வேண்டுமானால் பூமிக்கு சூரியன் என்கிற மிகப்பெரிய பேட்டரி தேவையாயிருக்கிறது. எப்போதுமே தகதகவென எரிந்து கொண்டிருக்கிற சூரியனிலிருந்து பிறந்து வந்த குழந்தைதானே நம் பூமி. நமது பூமி பல மில்லியன் காலம் எரிந்தும், அதன் பாறைகள் எரிவதிலிருந்து மேலே சென்ற புகைமூட்டங்களெல்லாம் குளிர்ந்து ‘சோ’ வென்று மழையாக பல மில்லியன் காலம் பெய்தும்தான் நமது பூமியே ஓர் உயிர்க்கோளமாக மாறியிருக்கிறது என்றால், உயிர் உருவாக வெப்பம் எவ்வளவு முக்கியம் என்பதை யோசித்துப் பாருங்கள். இப்படி பல மில்லியன் காலம் பூமியானது சூடாகியும் பின் குளிர்ந்தும் சூரியனோடு ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் ஒரு காலத்தில் பூமியின் மடியில் கரு தங்குவதற்கு சாதகமான வெப்பநிலை வரும்போது பூமியும் கருவுற்று தனது பெரும் கடல்பரப்பில் ஒரு செல் உயிரிகளை உருவாக்கியது. அட, நம் வீட்டுப் பெண்களின் வயிற்றில்கூட கரு உருவாகி ஒரு செல்லிலிருந்து பலவாக பெருகி குழந்தையாக வளர்வதும் தண்ணீர் குடத்தில்தானே. என்ன, பூமிக்கு மட்டும் கடலென்ற பெரிய தண்ணீர் குடம்.
ஆண் பெண் உடலுறவு கொள்ளும் சமயத்தில் உடல் வெப்பமாதலும், பெண்ணின் சூல் பையிலிருந்து சினைமுட்டை சராசரியாக 14வது நாள் வெளிவரும்போது உடலில் 1 டிகிரி வெப்பம் அதிகரிப்பதும் வைத்தே தெரியவில்லையா, உடல் வெப்பம்தான் உயிரை உருவாவதற்கு ஆதாரம் என்று! அதுமட்டுமா, பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவதற்கு தாயின் மார்போடு சேர்த்தே கதகதப்பாக அணைத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்துவதும், தேவைப்பட்டால் வெப்பமூட்டுகிற பெட்டியில் வைத்து பராமரிப்பதுமாக வெப்பம் என்பது பிஞ்சுக் குழந்தைகள் வளர்ச்சிக்கும் அவசியமானதாகத்தானே இருக்கிறது. குழந்தையில்லா தம்பதிகளுக்கு அவரவர் ஜீவ அணுக்களை பிரித்தெடுத்து அவற்றை 98.6° வெப்பநிலையில் வைத்து வளர்த்தால்தானே கருவும்கூட குழந்தையாகிறது. ஏன், கோழி முட்டைகளைக்கூட நாம் 99° முதல் 102° வெப்பநிலையில் வைத்து குஞ்சு பொறிக்க வைத்துவிடவில்லையா?
ஆக, வெப்பம் என்பது ஒரு உயிரை உருவாக்குவதற்கும், அவை ஆரோக்கியமாக வளர்ப்பதற்குமாக தேவைப்படுகிற அதே சமயத்தில் பூமியினுடைய வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட ஐந்து வகையான வெப்பநிலை உயர்வு நிகழ்வால் அரிய கடல்வாழ் உயிரினங்கள், மாமூத்துகள், டைனோசர்கள் போன்ற இனங்களெல்லாம் அழிந்தே போய்விட்டன. அதுமட்டுமா, வெப்பநிலை மாற்றங்களால் பல உயிரினங்களில் பரிணாம வளர்ச்சியை ஊக்குவிக்கவும் செய்திருக்கிறது. அத்தகைய வெப்பநிலை மாற்றத்தால்தானே பூமியில் பாலூட்டி இனங்களும் தோன்றி நம் குரங்கு மூதாதையர்களும், அதிலிருந்து மனிதர்களிய நாமும் உருவாகியிருக்கிறோம். இப்போது புரிகிறதா, பூமியில் மட்டுமல்ல நம் உடலிலும் வெப்பச் சமநிலை சரியாக இருந்தால்தான் ஆரோக்கியமாகவே வாழ முடியும். அதனால்தானே நாம் இப்போது காய்ச்சல் காலத்தில் குளித்தலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சரி, நிகழ்காலத்திற்குத் திரும்பி வருவோம். பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் ஓரிடத்தில் குளித்தல் என்பது குளிர்த்தல், அதாவது உடம்பை குளிர்வித்தல் என்று குறிப்பிடுவார். வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்கிற நம்முடைய பழக்க வழக்கத்திலிருந்து தண்ணீர் உபயோகத்தில் குளித்தல் என்கிற பேச்சு வழக்கு உருவானதாக அவர் குறிப்பிடுவதும்கூட உண்மைதான். வெட்ட வெயிலில் ஓடியாடி வேலை செய்து களைத்து சூடாகிப்போன நம்முடைய உடலை குளிர்விப்பதன் (குளிப்பதன்) மூலம்தானே ஆரோக்கியமானது நமக்கு மீண்டும் மீண்டும் கிடைத்துக் கொண்டே இருந்தது.
ஆயுர்வேத மருத்துவத்தில்கூட குளியல் முறைகளை நோய்களை குணப்படுத்தும் சிகிச்சையாகப் பயன்படுத்துகின்றனர். நீராவிக் குளியல், மண் குளியல், சேற்றுக் குளியல், வாழையிலைக் குளியல், மூலிகைக் குளியல் என்று நோய்களுக்கு ஏற்ப குளியலை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏன், பறவைகள் விலங்குகள்கூட யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே இத்தகைய குளியலை செய்து கொண்டுதான் இருக்கின்றன. பன்றிகள் சேற்றில் உருண்டு புரளுவதும், யானைகள் சேற்றை வாறி உடம்பில் பூசிக் கொள்வதும், நாய்கள் ஈரச் சாக்கில் போய் முடங்கி படுத்துக் கொள்வதும், மேய்ந்த மாடுகள் ஈர நிலத்தில் படுத்துக்கொண்டு வாய் அசைபோடுவதும், முதலைகள் கரையில் வந்து சூரியக் குளியல் போடுவதும், பறவைகள் மலை உச்சியில் நின்று இறக்கைகளை விரித்து தன் உடல் வெப்பத்தை தணித்துக் கொள்வதும்கூட ஆரோக்கியத்தை பேணுகிற வழிதானே. காக்காவும்கூட தண்ணீரில் தலையை விட்டு உலுப்பிக் கொள்வதன் வழியே உடலின் வெப்பத்தை தணித்துக் கொள்கிறது. ஆனால் நம்முடைய குளிப்பதற்கான சோம்பேறித்தனத்திற்கு காக்காவின் ஆரோக்கியம் பேணுகிற செயலைப்போய் ஒரு வசவுப் பேச்சாக மாற்றிவிட்டோமே, என்ன அநியாயம் பாருங்கள். விலங்குகளும், பறவைகளும் அதனதன் பெற்றோர்களிடமிருந்து குளிப்பதன் வழியே ஆரோக்கியத்தை பேணுகிற வித்தையை எப்படியோ கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். அதேபோல நாமும் நம் பிள்ளைக்கு காய்ச்சல் வந்தால் எப்படி குளிக்க வேண்டும் என்று சொல்லி ஆரோக்கியமாய் வாழ கற்றுக் கொடுக்க வேண்டாமா? சரி சரி, அதற்குள் அவசரப்பட வேண்டாம். இன்னும் சில முக்கியமான விசயங்கள் இருக்கிறது.
காய்ச்சல் வந்தால் எப்போது உடல் குளிர்ச்சியாக இருக்கும் பின் எப்போது சூடாக இருக்கும் என்று தெரிந்தால்தானே எந்த நேரத்தில் எந்த தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரியும். ஒருவேளை நமக்கு நோய்த்தொற்று இல்லாமல், வெயிலில் அலைந்து திரிவதன் மூலம் உடல் சூடாகிப் போயிருந்தால் நமது 98.6° வெப்பநிலைக்கும் குறைவான அளவில் இருக்குமாறு மிதமான குளிர் தண்ணீரில் குளித்தால் உடனே உடலின் வெப்பநிலை சீராகி புத்துணர்வு பெற்றுவிடும், தூக்கமும்கூட நன்றாக வரும். அதேபோல ஊட்டி கொடைக்கானல் செல்லும்போது உடல் சில்லிட்டு குளிர்ந்து போனால் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்துவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும். இப்படி உடல் வெப்பநிலை அதிகமானாலோ, குறைந்தாலோ அதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப தண்ணீரைத் தேர்ந்தெடுத்து குளித்தாலே ஆரோக்கியம் நம் எங்கும் தொலைந்து போய்விடாது. ஆனால் நம் உடலில் நோய்கிருமி நுழையும்போது அத்தகைய கிருமி எத்தகைய சூட்டில் உயிரைவிடும் என்று ஹைப்போதலாமஸ் ஒரு கொதிக்கிற பால் குக்கரைப்போல வேலைசெய்து, அந்த கிருமி சாகின்ற வெப்பநிலையை உடனே கண்டுபிடித்து 100 என்றோ 102 என்றோ செட் செய்துவிடும் என்று முன்பே பார்த்தோம் அல்லவா. இத்தகைய ஹைப்போதலாமஸ் செட் செய்த வெப்பநிலைக்கு ஏற்ப உடம்பின் வெப்பநிலையை திருத்தியமைக்க தோல்களுக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை மெதுவாக்கி நம் உடலின் வெப்பநிலையை வெளியேற்றாமல் சேமித்து வைத்துக் கொள்ளும் என்றும்கூட பார்த்தோம்.
தொடர்ச்சி அடுத்த வாரம்...
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com