what-they-told

img

பொருளாதார நெருக்கடி ஒருபுறம்; ஆப்கன் - பாகிஸ்தான் மோதல் மறுபுறம்! - காபூல் / இஸ்லாமாபாத், மே 3 -

காபூல் / இஸ்லாமாபாத், மே 3 - அதிகாலை 3 மணி இருக்கும். காதைப் பிளக்கும் ஓசையைக் கேட்டு விழித்துப் பார்த்தார் குவாத்ரதுல்லா. குழம்பியபடியே தனது செங்கற்களால் எழும்பியுள்ள வீட்டிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்க்கிறார். வெளியே இருந்த காட்சியைப் பார்த்து அப்படியே உறைந்து போய் நிற்கிறார்.  கரும்புகை மண்டலமாக இருந்தது. எதிரே இருந்த உறவினர்களின் வீடு இடிபாடாக மாறியிருந்தது. உறவினரின் 3 வயதுக் குழந்தை அழுதவாறே நின்று கொண்டிருந்தது. அக்குழந்தையின் பின்னால் நான்கு குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. அவர்களை நோக்கி குவாத்ரதுல்லா ஓடியபோது மற்றொரு குண்டு வெடித்தது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மண்டாடா என்ற குவாத்ரதுல்லாவின் கிராமத்தில்தான் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மொத்தம் நான்கு கிராமங்களில் இது நடந்துள்ளது. 20 குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  கொல்லப்பட்ட 45 பேரில், 27 பேர் குவாத்ரதுல்லாவின் உறவினர்களாவர். கதறுகிறார் குவாத்ரதுல்லா. ‘‘துணைவியாரை இழந்தேன். உறவினர்களை இழந்தேன். வீடு சின்னாபின்னமாகிவிட்டது. எங்கள் வாகனங்கள், விலங்குகள் அனைத்தையும் அழித்து விட்டார்கள்’’ என்கிறார் அவர்.

பாக்.ராணுவம்

ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம்தான் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானுடனான உறவு மோசமாகியது. சில வாரங்களுக்கு முன்பாக, எல்லை தாண்டிய மோதல்கள் தொடர் கதையாகியுள்ளன.  விடிவதற்கு முன்பாக கோஸ்ட் மற்றும் குனார் ஆகிய இரண்டு பகுதிகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், நிலைமை கட்டுக்குள் இல்லாததையே காட்டுகிறது. ஆனால் இந்தத் தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தினோம் என்று பாகிஸ்தான் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. மறுக்கவும் இல்லை.  எல்லைப் பகுதியில் இயங்கி வரும் சில தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த சிலர், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டார்கள். கிழக்கு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இது மோசமான அறிகுறிகளைக் காட்டுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். நீண்ட கால மோதலின் புதிய அத்தியாயமாக இது இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். இது போன்ற படையெடுப்புகளை தலிபான் ஏற்றுக் கொள்ளாது என்று ஆப்கானிஸ்தானின் ராணுவ அமைச்சர் முல்லா முகம்மது யாகூல் தெரிவித்துள்ளது. 

பொய்த்துப் போன அனுமானம்

ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து இயங்கி வந்த தீவிரவாதிகளில் தனக்கு எதிரான மனநிலையில் உள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து அழித்து வருகிறது. மிகவும் மலை மற்றும் காட்டுப் பகுதியாக இருப்பதால் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு அனுமானம் இந்த சம்பவங்களால் பொய்த்துப் போயுள்ளது. 20 ஆண்டுகள் நடந்த போரில் பாகிஸ்தானின் ஆதரவால் பலனடைந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் கட்டுக்குள் வைப்பார்கள் என்று நினைத்தனர். அப்படி நடக்கவில்லை. சொல்லப்போனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் தங்கள் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் மண்ணில் 82 தாக்குதல்களை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்தியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 133 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் தங்கள் செல்வாக்கினை இழந்து நின்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது பலத்தை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆகஸ்டு 2021 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆதரவுடன் இருந்த பொம்மை ஆட்சி கவிழ்ந்ததில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. 

மோதல் அபாயம்

பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் வரும் அபாயம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தலிபான் என்று அழைக்கப்படும் அந்த அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதாக அப்பகுதி விவகாரங்களை உற்றுநோக்கும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.  நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கொள்கை ரீதியாக ஆப்கானிஸ்தான் தலிபான்களும், பாகிஸ்தான் தலிபான்கள் ஒரே திசைவழியில் பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். கொள்கை ரீதியான இரட்டையர்கள் என்று மடிஹா அப்சல் என்ற ஆய்வாளர் வர்ணிக்கிறார். தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் அதிகாரம் வந்துள்ளதால், அந்த மண்ணிலிருந்து பாகிஸ்தான் தலிபான்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. 

தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்துப் பொருளாதாரங்களுமே பெரும் நெருக்கடியில் சிக்கும் அபாயம் வலுத்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது விதிக்கப்பட்ட தடைகளோடு, பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மீதான தாக்குதல்கள் நெருக்கடியை முற்றச் செய்துள்ளன.  உணவின்றித் தவிக்கும் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் எண்ணிக்கை கோடியைத் தொடுகிறது. உயிரிழப்புகளும் நிகழத் தொடங்கியுள்ளன. தடைகள் தளர்த்தப்பட்டு, சர்வதேச சமூகத்தின் நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. லட்சக்கணக்கான உயிர்கள் அபாயத்தில் உள்ளன என்று ஐ.நா. சபையின் உதவி அமைப்புகளே கூறி வருகின்றன. பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா நிதியுதவியை சில நாட்களுக்கு முன்பு வழங்கியிருக்கிறது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விடாமல் நிரந்தரத் தீர்வை எட்ட முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் உறுதியற்ற நிலையால் இந்த நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.  ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் போட்ட நிபந்தனைகள்தான் நிலைமையை மோசமாக்கியுள்ளன. மீண்டும், மீண்டும் அதே பாதையை பாகிஸ்தான் தேர்வு செய்ய முயல்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் மறுபுறத்தில் நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம் - நியூயார்க் டைம்ஸ் 
தி கொல்கத்தா டெலிகிராப் மூலமாக 

;