what-they-told

img

உரக்கப் பேசு

‘சப்தர் ஹஷ்மி’
சத்தம் போட்டுச் சொல்ல 
உந்தித் தள்ளுகிறது உள்ளம் 

முப்பதாண்டுகள் கடந்தும் 
புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம்
சத்தமாய்ச் சொல்ல 
உந்தித் தள்ளுகிறது உள்ளம் 

புத்தாண்டு நாளிரவு 
சத்தான வீதிநாடகம் 
‘உரக்கப் பேசு’வில் 
உரக்கப் பேசி நடித்தான் 
சதிவலை பின்னலறியா
வீதிநாடகக் கலைஞன்

உரக்கப் பேசியவன்
குரல்வளை நெறிக்க
சப்தர் ஹஷ்மியின்
சப்தம் நிசப்தமானது

தொழிலாளர் பாடுகளை 
கழிவிரக்கமிலா ஆளும் வர்க்க
இழிவுமிகு சுரண்டல் ராச்சியத்தை 
கிழித்துத் தொங்கவிட்டால்
ஒழித்துக்கட்டத்தானே துடிக்கும்
கொழுத்த ஆளும் வர்க்கம் 

நள்ளிரவுப் படுகொலை 
கொள்ளிவைக்க நினைவலை 
துள்ளி எழும் வர்க்கப் போர்நிலை

சப்தர் சிந்திய ரத்தம் 
சப்தம் போட்டுப் பேசினார் 
மனைவி மாலாஸ்ரீ
களமிறங்கிக் கனல் தெறிக்க
‘உரக்கப் பேசு’
உரத்த முழக்கமானது
துரத்தும் யுத்தமானது 

ஒரு கலைஞனின் கொலை
பலநூறு கலைஞர்கள் 
முளைத்தெழ உரமானது

உழைக்கும் வர்க்கச் சுரண்டலை
உரக்கப் பேசும் படைக்கு
சிறக்கும் வழியானது
சிவக்கும் விழியானது 

ஆட்சிகள் மாறின
காட்சிகள் இன்னும் கொடூரமாய்..
கும்பல் கொலைகளின் கோலோச்சல்
இந்திய ஜனநாயகத்தை
முச்சந்தியில் நிறுத்தித்
தீவிரத்  தாக்குதல்
கருத்துச் சுதந்திர 
குரல்வளை நெறிக்கும்
ஆக்டோபஸ் ஆளும் கரங்கள் 

“ஒரே தேசம் ஒரே மதம் 
ஒரே கட்சி ஒரே ஆட்சி”யெனும் 
காட்டுக் கத்தலில் 
அடங்கிப் போகின்றன
பிற்போக்குப் 
பொருளியல் கொள்கைகள்

உலகம் சுற்றும் வாலிபனாய்
கலக வாய்வீசலில்
திலக வேலையின்மை 
விலகிச் செல்கிறது 

ஐந்து மாதங்களாய்
நொந்த உடலும் உள்ளமும்
எந்த தேசத்திலும் காணா
காஷ்மீர் முஸ்லிம்களின் 
கண்ணீர்க் கதைகள் 

பெண்களும் குழந்தைகளும்
வாழ்வதற்குகந்ததிலை 
தாழ்கிறது தேசம் தரணியில்

பொருளியல் மந்தத்தின்
உருவமாய் உலகின் முன்
இந்தியா இருக்கையிலும்
பெருமையடித்துக் கொள்ளும்
கோயபல்ஸ் பரப்புரைகள்

தடியெடுத்தவனெல்லாம்
தண்டல்காரனாகி
கலாச்சார காவலர்களாக
பசு குண்டர்களாக
அவதாரமெடுப்பர்
அட்டூழியம் புரிவதற்காகவே

குடியுரிமை மறுப்பு 
குரூர அரசியல் வெறுப்பு 
வெடிக்கும் போர்களில்
துடிக்கும் உயிர்கள்
அரச பயங்கரவாத நச்சம்புகளால்
முரசு கொட்டித் தொடரும் போர் 

முப்படை தனித்துவ வேட்டு
முப்படைக்கும் சர்வாதிகார ஓட்டு
தப்பான பாசிச போக்கு
தப்பாமல் போரிடல் நோக்கு  

புத்தாண்டு வெடிச்சத்தம்
இந்தாண்டும் செவிகிழிக்கும்
எந்தாண்டுமிலா அளவிற்கு 

‘உரக்கப் பேசு’ 
வீதிகளை அதிரச் செய்த
சப்தரின் சப்தம்
நிசப்தமாகிவிடவில்லை
சபதமானது 
இரக்கமற்ற அரசுகளால் 

உரக்கப்பேச 
சங்கிலித் தொடராய்
நிறைகிறது நீள்கிறது...
புரையோடும் பிரச்சனைகள்

உரக்கப் பேசுவோம்
விதைக்கப்பட்ட வீரிய வித்துகளின்
விருட்சங்களாவோம்
ஒன்றல்ல இரண்டல்ல
ஆயிரமாயிரம் சப்தர் ஹஷ்மிகளாய்...

அறைகூவி அழைக்குது போரொலி
பறையடித்து ஒன்று திரள் நேரினி
ஜனங்களுக்கான வேலைநிறுத்தம் 
ஜனவரி எட்டுப் போர் பொருத்தம் 

-பெரணமல்லூர் சேகரன்

(இன்று (ஜன.1) மக்கள் வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹஸ்மி நினைவு நாள்)

;