சென்னை:
வங்கக்கடலில் புதனன்று (டிச. 2) காலை ‘புரெவி’ புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை (டிச. 2) காலை புரெவி புயலாக வலுப்பெற உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும். டிச.3 ஆம் தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும்.தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.புதனன்று (டிச. 2) மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இதனால் தென் காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தென் தமிழக மற்றும் கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
************************
புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்: அமைச்சர்
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்.ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு புதனன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.