சென்னை, ஜன. 13 - தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தொடர்ச்சியாக சட்டபேரவையின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார். அண்மையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தனது உரையை வாசிக்காமலும் வெளிநடப்பு செய்தார். இவ்வாறு தொடர்ந்து அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து ஆளுநர் மாளிகை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு, திமுக எம்.பி. வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளி யிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? ஆளுநர் பதவிக்கே அவர் அவ மானம். தமிழ்நாடு அரசாங்கத்தையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்த்து, திமுகவுடன் சித்தாந்த மற்றும் அரசியல் போராட்டத்தில் ஈடுபடும் அவரது போக்கு, அரசியலமைப்புப் பதவியை வகிக்க அவர் தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது. அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்க மிகவும் ஆர்வமாக இருந்தால், அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழ்நாட்டிற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவு ஆற்றுவது முரண்பாடாக உள்ளது. நமக்கு, இந்தியாவும் தமிழ்நாடும் இரு கண்கள் போன்றவை. இரண்டும் சமமாக முக்கியம், ஒருவரையொருவர் மகிழ்விக்க நாம் புண்படுத்துவதில்லை. இதை ஆளுநர் ரவி கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அரசியலமைப்பைப் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்ட விரோத செயல்களுக்கு ராஜ்பவனில் உள்ள அரசு ஊழியர்கள் உதவுவதை கண்டு வியப்படைகிறேன். ராஜ்பவன் ஊழியர்களை பணியமர்த்துவது தமிழ்நாடு அரசு. எனவே இந்த அரசின் கொள்கைகளை விமர்சிப்பதன் மூலம் நடைமுறையில் உள்ள நடத்தை விதி களின்படி ஒரு அரசு ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்பு கிறேன்.” என தெரிவித்துள்ளார்.