weather

img

அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

அதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரளத்தில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளத்தில் வருகிற அக்.14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.