சென்னை:
தமிழகத்தில் புதன் கிழமை முதல் மழை சற்று குறையலாம் என்றும், 25, 26ஆம் தேதிகளில் புதிய புயலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல் வேறு இடங்களில் கனமழை பெய்தது.சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மழை பெய்தது. திங்கட் கிழமை காலையில் பெய்யத் தொடங்கிய மழை புதன் காலை வரை பெய்தது. செவ்வாயன்று இரவிலும் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதன் கிழமை முதல் மழை சற்று குறையலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய் துள்ளது. தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும் 15 இடங்களில் புதன்கிழமை காலை வரை கனமழை பெய்தது.தென் மாவட்டங்களில் புதன்கிழமை சில இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஒன்று அல்லது 2 இடங்களில் அதிக மழை பெய்யும்.
புதன்கிழமைமுதல் மழை படிப்படியாக குறையும், தென் கிழக்கு அரோப்பிய கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வியாழக்கிழமை (19ஆம் தேதி) தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இது தமிழக கடற்கரையில் இருந்து தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது.அரபிக்கடல் மீது மோசமான வானிலை நிலவுவதால் கேரளா கடற்கரை, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களில் பெய்த பலத்த மழை, வடகிழக்கு பருவமழையின் பற்றாக் குறையை குறைக்க உதவியது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக் கூடிய மொத்த மழைக்கு இன்னும் 30 சதவீதம் பற்றாக்குறை உள்ளது.அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை 29.2 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 20.5 செ.மீ. மழையே பெய்துள்ளது. சென்னையில் வியாழக் கிழமை வரை ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.