technology

img

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு: இழப்பீடு வழங்க கூகுள் ஒப்புதல்  

கூகுள் நிறுவனம் பெண் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், கீழ்நிலை பணிகளை மட்டுமே வழங்கியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்குவதாக அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.  

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீட்டை வழங்குவதாக அமெரிக்காவின் லீஃப் காப்ரேசர் ஹெய்மன் மற்றும் பெர்ன்ஸ்டீன் எல்.எல்.பி, ஆல்ட்ஷூலர் பெர்ஸான் எல்.எல்.பி ஆகிய வழக்கறிஞர் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் பல்வேறு முன்னாள் பணியாளர்கள் அந்நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரே விதமான பதவிகளில் பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக ஊதியம் வழங்கப்பட்டதாகவும், ஒரே பணி அனுபவம் கொண்டிருப்போரில் பெண்களுக்கு தகுதி குறைவான பணிகளே வழங்கப்பட்டதாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இதனால் கூகுள் நிறுவனம் 118 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 920 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.  

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள விசாரணையில், கூகுள் வழங்க முன்வந்த இழப்பீடு நீதிபதியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலின பாகுபாட்டிற்காக கூகுள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல.  

கடந்த 2021 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் பெண்கள், ஆசிய மக்கள் முதலானோருக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அமெரிக்க தொழிலாளர் துறைக்கு இழப்பீடாக சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை அளிக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

;