மதுராந்தகம், ஜன. 9- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டதை கண்டித்து 2ஆவது நாளாக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கல்வி, வேலை, மருத்துவம் என நாள்தோறும் சென்னை சென்றுவர மதுராந்தகம் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஒரு சில ரயில்கள் மட்டுமே மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது. மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் புதுச்சேரி - சென்னை இடையிலான பயணிகள் ரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயங்கப்பட்டது. இந்த ரயிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 பெட்டிகள் குறைக்கப்பட்டு 8 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. கூடுதல் பெட்டிகளை இணைக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புதன்கிழமை காலை பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் வியாழக்கிழமை ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனக் கூறி பயணிகளை அனுப்பி வைத்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து வியாழக்கிழமை காலை மீண்டும் புதுவையில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.