tamilnadu

img

வேலை இல்லா இளைஞர்களை அணிதிரட்டிப் போராடுவீர்!

அரசு ஊழியர்களுக்கு டி.கே.ரங்கராஜன் அழைப்பு

தஞ்சாவூர், செப்.27- வேலைவாய்ப்பற்ற இளைஞர் களை அணிதிரட்டி, அவர்களை ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்திடுமாறு அரசு ஊழியர்களுக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க த்தின் 13 ஆவது மாநில மாநாடு, தஞ்சாவூரில் தோழர் வெ.கோபால்சாமி நினைவரங்கில், வெள்ளிக்கிழமை கொடியேற்றம், தியாகிகளுக்கு அஞ்சலியோடு தொடங்கியது.  பொது அமர்வுக்கு மாநிலத் தலைவர்(பொ) ஆ.செல்வம் தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் வழக்கறிஞர் இரா.தமிழ்மணி வரவேற்றுப் பேசினார். மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் துவக்க வுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பல்வேறு போராட்டங் களுக்கு இடையே தோற்றுவிக்கப் பட்டது.  மத்திய அரசின் பஞ்சப்படி யை போராடிப் பெற்றுத் தந்தது ஜாக்டோ-ஜியோ அமைப்பு என்பதை மறக்க முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து, ஒற்றுமையாக போராட வேண்டியது அவசியம். அரசு ஊழியர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாது. ஆனால் அரசை, அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நவீன தாராளமயத்தின் காரணமாக விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் மனித சக்தியின் தேவை குறைந்து இயந்திரங்களின் தேவை அதிகரித்துவருகிறது. 

அரசு ஊழியர்களின் எண்ணி க்கை குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2000 க்குப் பிறகு புதிய அரசு ஊழியர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பெரும்பா லும் அவுட்சோர்சிங் முறையில் தனி யார் நிறுவனங்கள் மூலம் வேலை க்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நவீன தாராளமயம் அழித்து விட்டது. 

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வக்கற்ற நிலை யில் அரசு உள்ளது. மத்திய அரசு தனக்கு ஆதரவாக, எதிர்க்கட்சி களை மிரட்டி தன் வழிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் ஒழுக்கமான கட்சி அல்ல. சிபிஐ மூலம் ரெய்டு நடத்தி, சட்டப்படி வழக்குப் போடாமல், மிரட்டி தனது கட்சியில் கொண்டு போய் சேர்ப்பது நியாயமானதா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  மாநிலங்களின் உரிமையைப் பறிக்கக் கூடியதாக மத்திய அரசின் சட்டங்கள் உள்ளன. அதற்கு உதாரணமாக மோட்டார் வாகனச் சட்டம் உள்ளது. மோட்டார் வாகன சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் போக்குவரத்து துறையை மாநில அரசின் கையிலிருந்து பறித்து, கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்குவது தான். அதே போல புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில அரசின் கையில் இருந்த மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும் அபாயம் உள்ளது. சிபிஐ, ஐ.பி., நீதி மன்றங்கள், நீதிபதிகள் அரசின் கைப்பா வையாக மாறும் நிலை வேதனைய ளிக்கிறது. 

மகாத்மா காந்தி தேசப் பிதா என்பதி லிருந்து மாறி, மோடி தேசப்பிதா என்னும் நிலையை உருவாக்கி வருகின்றனர். அம்பானி, அதானி போன்றவர்களுக்கு வேண்டுமானால் மோடி பிதாவாக இருக்கலாம். மானமுள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  8.19 சதம் வேலையில்லாதோர் தற் போது அதிகரித்துள்ளனர். அவுட்சோர் சிங் காரணமாக வேலை இல்லாத் திண் டாட்டம் அதிகரித்துள்ளது. வேலை யில்லா இளைஞர்களைத் திரட்டுவது, அவர்களுக்காக பாடுபடுவது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செய லாளர் ஏ.ஸ்ரீகுமார், சமூக வலைத் தளத்தை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலை வர் நெ.இல.சீதரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செய லாளர் ச.மயில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மதியம் பிரதிநிதித்துவப் பேரவை அமர்வில், குழுக்கள் தேர்வு நடை பெற்றது. மாநிலத் தலைவர்(பொ) ஆ.செல்வம் தலைமை வகித்தார். வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையை பொதுச் செயலாளர் மு.அன்பரசு, வரவு- செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ் ஆகியோர் தாக்கல் செய்து பேசினர். 

மாநாட்டு தீர்மானங்கள் 

அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிர மணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்; ஜாக்டோ- ஜியோ  போராட்டத்தின் போது மேற்கொள்ளப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்கு கள், தொலைதூர மாறுதல்களை ஆகிய வற்றை ரத்து செய்து பதவி உயர்வுகள் மற்றும் பணி ஓய்வு வழங்கிட வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும்; 21 மாத கால ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர் கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோ ருக்கு வழங்கப்படும் சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து விட்டு, கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும்; தொகுப்பூதியம் பெற்று வரும், கணினி உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.  லட்சக்க ணக்கான காலிப் பணியிடங்களை உடன டியாக நிரப்ப வேண்டும்; அரசுத்துறை தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும்; சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக் காலமாக வரன் முறை செய்யவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக நூல் வெளியீடு மற்றும் முன்னாள் மாநில நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.