tamilnadu

வேலூர், மதுரை ,தஞ்சாவூர் ,விருதுநகர் முக்கிய செய்திகள்

வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்
வேலூர், ஜூன் 5- வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலூர் சத்துவாச்சாரி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், குறை தீர்க்கும் கூட்டம் வரும், 10 ஆம் தேதி நடக்கிறது. இதில், சந்தாதாரர்களுக்கு காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தொழிலதிபர்களுக்கு மாலை 3 முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 முதல் 5 வரையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே, உறுப்பினர்கள் குறைகளை தங்கள் பெயர், பி.எப்., கணக்கு எண், பென்ஷன் எண் ஆகிய விவரங்களை எழுதி, வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம், எஸ் 4, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பகுதி மூன்று, சத்துவாச்சாரி, வேலூர்- 632009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0416 2254340 என்ற பேக்ஸ் எண்ணுக்கு அனுப்பலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

6.5 கிராம் தங்கத்தில் மதீனா மசூதி: நகை தொழிலாளி சாதனை
வேலூர், ஜூன் 5-ஆம்பூரை சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி சி.எஸ். தேவன் (52), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நகை மதிப்பீட்டாளர். உலக சாதனை புரிவதற்காக, தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிரிக்கெட் உலகக் கோப்பை, திருக்குறள் சுவடி, முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தேசத் தந்தை மகாத்மா காந்தி, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோவின் செயற்கைக் கோள் ஏற்றிச் சென்ற ராக்கெட், கிரிக்கெட் மைதானம், கடந்த மார்ச் மாதம், 400 மி.கி. எடையிலான மிகச்சிறிய ஷூக்கள், கிறிஸ்துமஸ் குடில், 1.900 கிராம் எடையில் பொங்கல் பானை, கரும்பு மற்றும் மாடு ஆகியவற்றை மிகச்சிறிய அளவில் தங்கத்தில் உருவாக்கி சாதனை புரிந்து வருகிறார்.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 48 மணி நேர தொடர் உழைப்பால் 6.500 கிராம் தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியைக் கொண்டு மதீனா மசூதியின் மாதிரியை மிகச்சிறிய அளவில் உருவாக்கியுள்ளார். 4 இஞ்ச் உயரத்தில் மசூதி கோபுரம், 1 இஞ்ச் உயரத்தில் மற்றொரு சிறிய மசூதி கோபுரம், கரும்பு, 1 செ.மீ. உயரத்தில் மாடு ஆகியவற்றை தங்கத்தில் செய்துள்ளார். இதையறிந்த ஆம்பூர் பகுதி மக்கள் அதை பார்த்து பெருமிதம் கொள்கின்றனர்.

கீழடி அகழாய்வுப் பணி ஜூன் 10-ல் தொடங்குகிறது
மதுரை, ஜூன் 5-சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஜூன் 10-ஆம் தேதி ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளது,ஐந்தாம் கட்ட அகழாய்வு மனோகரன் என்பவருக்குச் சொந்தமான 19 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நடைபெறவுள்ளது, ஐந்தாம்கட்ட அகழாய்வுக்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது, இந்தப் பணி ஓராண்டு நடைபெறும்.அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இடத்தை சுத்தப்படுத்தும்பணியில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அகழாய்வை தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்ப் பல்கலையில் பி.எட் நேரடிச் சேர்க்கை 
தஞ்சாவூர், ஜூன் 5- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் வழியில் இளங்கல்வியியல் மற்றும் கல்வியியல் நிறைஞர்(பி. எட்., எம். எட்.,) நேரடிச்
சேர்க்கை ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்ப கட்டணம்(பொது) ரூ 600 மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ 300. தகுதியுடையோர் கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பு உள்ளது. 

பெண் காவலர் மீது தாக்குதல் 
விருதுநகர், ஜூன் 5-இராஜபாளையம் அருகே உள்ள கணபதிசுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியதாய். இவரது மகள் அழகுராணி (35). இவர் திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளது. சிலரை கடிக்கப் பாய்ந்துள்ளது. இதை பக்கத்துவீட்டைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப் போது அழகுராணிக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தன்னை தாக்கியதாக அழகுராணி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.