tamilnadu

img

அதிமுகவைத் துரத்தும் மக்களின் கோபமும் திமுக வேட்பாளரின் நம்பிக்கை வார்த்தைகளும்

வேலூர்:
வேலூரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாணியம்பாடி தொகுதியிலிருந்து துவங்கிய நமது பயணம் ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வழியாக வேலூர் வரைக்கும் இரண்டு நாட்கள்  தொடர்ந்தது.சென்ற இடமெல்லாம்,  அதிமுக அரசால் தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏராளமாக முன்னுக்கு வந்தன.மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டுள்ள பாலாற்றை அதிலிருந்து மீட்டெடுப்பது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்துள்ளது.உப்புத் தன்மை அதிகமாக உள்ள நிலத்தடி நீரை செறிவூட்ட மாநிலத்தில் ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் மோடி அரசுகளிடம் இதுவரை எந்த திட்டமும் இல்லை என்பதையும் பார்க்க முடிந்தது.

கோபத்தின் உச்சம்
மிக முக்கியமாக இம்மாவட்டத்தின் எல்லை  தலைநகர் வேலூரிலிருந்து 100 கி. மீ. தூரத்துக்கும் அப்பால் அமைந்துள்ளது. மாவட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகம் வருவதற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற  நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளஆளுங்கட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

உலுக்கும் குடிநீர்
வெயிலுக்கு பெயர்போன வேலூரில்  உலுக்கி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது குடிநீர். திமுக ஆட்சியில் 50 விழுக்காடு நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணியைத் தொடர்வதில் கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறு துரும்பைக்கூட அசைக்காதது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு சொன்ன ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களில் வேலூரும் ஒன்று. ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகள் திட்டமிடப்பட்டு ரூ.537.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மூன்றுஆண்டுகளாக அதைப் பற்றி கவலைப்படாத நிர்வாகமாக வேலூர் மாநகராட்சி விளங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததுதான். இப்பிரச்சனைகளைப் பற்றி தங்களது பிரச்சாரத்தில் மக்களிடம் விளக்கிக் கொண்டிருந்த சிபிஎம் தலைவர்கள் கே. சாமிநாதன்,பி. காத்தவராயன், சிலம்பரசன்,சரவணன் ஆகியோருடன் பேசியபோது, இடதுசாரிகளின் கோட்டையான குடியாத்தம், கே.வி. குப்பம்  சட்டமன்ற தொகுதிகள் கே.ஆர். சுந்தரம், வி.கே. கோதண்டராமன் எம்எல்ஏக்களாக இருந்த போது போராடிக் கொண்டு வந்த மோர்தானா அணையால் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதையும் இதை மேலும் தரம் விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.

கடந்த15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்படாமல் கிடப்பில் உள்ள பத்தரப்பள்ளி அணை, மேல் ஆத்தூர்-அகரம் சேரி இடையேபாலாற்றில் தரைப்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றாத அதிமுக அரசின் செயலின்மையையும் அம்பலப்படுத்தினர்.தென்னை விவசாயம் நிறைந்த பகுதியான மேல் ஆத்தூரில் விவசாயிகளின் பாதிப்புகளையும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் நார் தொழிற்சாலை துவங்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கையையும் எடுத்துரைத்தனர்.ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ள சைன குண்டா பகுதியில் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முன்வராத ஆளும் கட்சியின் மக்கள்விரோத நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.

கதிர் ஆனந்த் வெற்றி உறுதி
“தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும்சட்டங்களை கொண்டு வந்திருக்கும் மத்தியஅரசுக்கு எடப்பாடி அரசு உடந்தையாக இருந்து வருகிறது. இது வேலூர் தொகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு பெருத்த பின்னடைவாகும். இதனால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மிக எளிதில் வெற்றி பெறுவது நிச்சயம்” என்றார் நம்மிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும், முதுபெரும் திரைக்கலைஞருமான குடியாத்தம் ஜிடோ கே.கே.ரத்தினம்.

பாலாறு காத்திட  திமுக வேட்பாளர் வாக்குறுதி
பிரச்சாரத்தின் போது, குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக உயிர் நாடியாக விளங்கும் பாலாற்றில் அபாயகரமான அளவில்ரசாயனக் கழிவுகள் கலக்கிறது என்பதையும் இதனால் இங்கிருந்து எடுக்கப்படும் குடிநீர்மாசடைந்து இருப்பதை ஆம்பூர், வாணியம்பாடி தொகுதி மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் எடுத்துரைத்தனர்.இதற்கு நிரந்தரத் தீர்வு காண நவீன திட்டங்களை கொண்டு வரவேண்டும். அப்படிசெய்தால்  மட்டுமே தொழிலையும், மக்களையும், பாலாற்றையும் பாதுகாக்க முடியும். மக்களவை உறுப்பினராக தன்னை தேர்வு செய்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த்.ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில், கிராமசாலைகள் இணைக்கும் இடங்களில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தவிர்க்க மேம்பாலங்கள் சுரங்கப்பாதைகள் அமைத்துக் கொடுக்கப்படும்; ரயில்வே மேம்பாலங்கள் கட்டித் தரப்படும்; மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க டைடல் பார்க் அமைக்க பாடுபடுவேன்; தென்மாவட்டங்களை வேலூர் மாவட்டத்துடன் இணைப்பதற்கு காட்பாடி வழியாக தினசரி ரயில் வசதி ஏற்படுத்திக் கொடுக்க பாடுபடுவேன்; காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ரயில்வே மண்டலம் ஒன்று உருவாக்க குரல் கொடுப்பேன்என கதிர் ஆனந்த் அளித்து வரும் வாக்குறுதிகள்மக்கள்மத்தியில்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரிலிருந்து சி.ஸ்ரீராமுலு,கே.சாமிநாதன்,ஞானவேல், கே. ஹென்றி..
 

;