வேலூர், அக்.29- திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப் பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தான். அவனது உடல் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூர், மாவட்டத்தில் பராமரிப்பற்று பயன்பாட்டுக்கு இல்லாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் தெருவில் உள்ள ஆழ்துளை கிணறு தண்ணீர் இல்லாமல் அப்படியே விடப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளை கிணற்றை மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மூடினர்.இதேபோல் வேலூர் மெயின் பஜாரில் பயன்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் பயனற்ற நிலையில் இருந்த 15 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது.