tamilnadu

img

திண்டிவனம்: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

திண்டிவனத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசு காரணமாக மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிகிறது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் அபாயமும் இருந்து வருகிறது. 

அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவர் உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு தனது வி.டெக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தேவாங்கர் வீதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இவர்கள் வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு மருத்துவமனை உள்ளே சென்ற நிலையில் திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிய தொடங்கியது.  

இதையடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததில் அருகிலிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்திலும் தீப்பற்றியது.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இரு வாகனங்களிலும் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.