tamilnadu

விழுப்புரம் மற்றும் வேலூர் செய்திகள்

காலமானார்

வேலூர், மே 11-சிபிஎம் ராணிப்பேட்டை கிளை தோழர் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் கே.ஜி.தியாகராஜன் துணைவியார் ராதா அம்மாள் (77) சனிக்கிழமையன்று (மே 11) காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எல்.சி.மணி, தா.வெங்கடேசன், நகரச் செயலாளர் மணிகண்டன், வாலிபர் சங்க வாலாஜா தாலுக்கா செயலாளர் ஜெயகாந்தன், கார்த்தி, குணா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.


திருவிழா இரு தரப்பு சமாதானம்

விழுப்புரம், மே 11-விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவிற்கு உட்பட்டது குண்டலபுலியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடத்துவது குறித்து அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மற்றும் பலராமன் தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் வட்டாட்சியர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற் றது. கூட்டத்தில் இரு தரப்பினரும் குழு அமைத்து ஒற்றுமையுடன் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சமாதான கூட்டம் சுமூகமாக முடிந்தது.கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் பாண்டியன், ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் மெகருனிசா, கிராம நிர்வாக அலுவலர் சவுந்திரராஜன், உதவியாளர் கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை நகராட்சி எச்சரிக்கை

விழுப்புரம், மே 11-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஆணையர் ஸ்ரீபிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி வீடுகள், பள்ளிகள், நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் என அனைவருமே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். மக்கும் குப்பைகளை ஓட்டல், கல்யாண மண்டபங்கள் உள் ளிட்டவை தாங்களாவே உரமாக மாற்றி மக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். வீடுகளில் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து சாலைகளிலும், கால்வாயிலும் வீசுகின்றனர். இனி குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அலுவலர் லிப்டன் சேகர், நகராட்சி பொறியாளர் பவுல்செல்வம், டாக்டர் சந்தோஷ்குமார், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தோழமை உணர்வு ஒழுக்கம் நன்னடத்தையை கற்றுத்தருவது என்சிசி

வேலூர். மே 11-பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தோழமை உணர்வு, ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவற்றைக் கற்றுத் தருவது என்சிசி என்று சென்னை குரூப் கமாண் டர் மஹேந்திரகுமார் கூறினார்.வேலூர் 10ஆவது பட்டாலியன் என்சிசி, சென்னை பட்டாலியன் என்சிசி சார்பில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கோடைகால கூட்டு பயிற்சி முகாம் கடந்த 10 நாட்கள் நடைபெற்றது.பயிற்சி முகாமின் நிறைவு விழாவிற்கு 10ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி டி.பி. சார்லஸ் தலைமை வகித்தார். பட்டாலியன் நிர்வாக அதிகாரி சுமித்ரஞ்சன் முன்னிலை வகித்தார். இதில், சென்னை பிரிவு குரூப் கமாண்டர் மஹேந்திரகுமார் பங்கேற்று சிறந்த என்சிசி மாணவர்களுக்குப் பரிசுகள், கோப்பைகள் வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களிடையே தோழமை உணர்வு, ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவற்றை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே கற்றுத் தரும் ஒரே அமைப்பு என்சிசி மாணவர்களுக்கு தலைமைப் பண்புகளைக் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு ராணுவம் சார்ந்த பயிற்சிகளை அளிக்கும் என்றார்.