ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையுடன் 21 வார்டுகளைக் கொண்டுள்ள கள்ளக் குறிச்சி நகராட்சியில் கடுமையான குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காலி குடங்களுடன் குடிநீரைத் தேடி அலையும் மக்கள் தினசரி சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.தமிழக அரசு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கி கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால் அதற்கான தயாரிப்பு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாகவே கள்ளக்குறிச்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தினால் தற்போது குடிநீர் தேடி பொதுமக்கள் இரவு பகலாக அலைந்து வருகின்றனர்.ஏற்கனவே திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள சுந்தரேசபுரத்திலி ருந்து தென்பெண்ணை ஆற்றில் கிணறுகள் அமைத்து ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயரில் கள்ளக்குறிச்சிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வந்தது. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பல இருந்தும், அதே போல ஏராளமான தெருக்களில் 1,000 முதல் 2,000 லிட்டர் கொள்ளளவில் சிந்தடிக் குடிநீர் தொட்டிகள் இருந்தும் அனைத்தும் தற்போது செயல்பாடிழந்து கிடக்கின்றன. வாரத்திற்கு ஒரு முறை உள்ளதை 15 தினங்களுக்கு ஒருமுறைதான் கள்ளக்குறிச்சியில் நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் நிலை உள்ளது. அதுவும் லாரிகளில் கொண்டு வந்து கொடுக்கும் சூழலே நிலவுகிறது. பொது குடிநீர் குழாய்களில் சூடான காற்று மட்டும்தான் வருகிறது.இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் சுந்தரேசபுரம் மற்றும் வழியில் உள்ள சில நீரேற்று நிலையங்களில் மோட்டார் பழுதடைந்துள்ளது. எனவே பழுதை நீக்கி மோட்டாரை சரி செய்தபின் தான் தண்ணீர் வழங்க முடியும் என பதில் கூறுகின்றனர். ஆனால் மாற்று வழியை யோசித்து நகராட்சி மக்களுக்கு குடிநீர்ப் பிரச்சனை தீர்த்திட முனைப்பான நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் ஈடுபடவில்லை என்று நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடும் கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சனையால் கள்ளக்குறிச்சி நகர மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.புதிதாக கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் கவுதமசிகாமணிக்கு முன்னுள்ள மிக முக்கியமான சவால் பணியே இப்பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது தான். முனைப்புடன் அவர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே நகராட்சி மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு.
-எஸ்.சித்ரா