சென்னை, ஜுன் 5 -தமிழ் பேசாத மாநிலங்களில் ஆப்ஷனல் (மூன்றாவது) மொழியாக (விருப்ப மொழிப்பாடம்)தமிழை வைத்தால் அது பழமையான தமிழ் மொழிக்கு செய்கிற பெருந்தொண்டாக இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதனன்று (ஜூன் 5) ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார். இது மொழிக் கொள்கையில் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மத்திய அரசு புதிதாக பதவியேற்ற பிறகு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது என்றும் மாநில மொழி,ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கட்டாய இந்தியை கற்க வேண்டும்என்றும் ஒரு அம்சம் சேர்க்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் இருந்து கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையின் படி தான் நடக்கும் என்று அறிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இரு மொழிக்கொள்கை படியே அரசு செயல்படும் என்று அறிவித்தார்.திமுகதலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்துஅரசியல் தலைவர்களும் பல்வேறு கல்வியாளர்களும் மத்திய அரசின் திட்டத்திலுள்ள இந்த மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்தனர்.
சிபிஎம் கடும் எதிர்ப்பு
வரைவுக் கல்விக் கொள்கை யில் மும்மொழித் திட்டம் முன்மொழியப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்ட அறிக்கையில், “மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்விக்கொள்கையில் பள்ளிக்கல்வியின் துவக்கநிலை யிலிருந்து மும்மொழிக்கொள்கை அமலாக்கப்படும் என்று முன்மொழிந் துள்ளது. இந்த முன்மொழிவை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு முற்றாக எதிர்க் கிறது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் எதிர்ப்பது என்பது இதன்பொருள் அல்ல; மாறாக இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளர்வதற்கும் மேம்படுவதற்கும் வாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கருத்தாகும்.தேசிய வரைவுக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை எனும் - பொருத்தமற்ற, உணர்வுகளை புரிந்துகொள்ளாத திட்டத்திற்கு எதிராக பரவலான முறையில் எதிர்வினைகள், குறிப்பாக தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக் கின்றன. இத்தகைய பலவந்தமான மொழித் திணிப்பு என்பது, நமது மக்களின் ஒற்றுமையையும் நாட்டின் ஒற்றுமையையும் கடுமையாக சீர் குலைக்கும் விதத்திலான மொழிவெறி உணர்ச்சிகளுக்கு மக்கள் இரையா வதை நோக்கி இழுத்துச் செல்லவே வழி செய்யும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
மும்மொழிக் கொள்கை மாற்றப்படவில்லை
இந்நிலையில் வரைவு கொள்கை யில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் அல்ல என்று தெரிவித்தது.அதாவது மும்மொழிக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், மூன்றாவது மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான பிரிவில், இந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநில மொழி, ஆங்கிலத்துடன், இந்தியை கற்பிக்க வேண்டும் என்றபரிந்துரையில் மட்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என பிரித்துக்குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அத்தகைய வகைப்பாடு மட்டும் நீக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வியாளர்கள் பலர், “மூன்றாவது மொழியை மாணவர்களே விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம் என பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம்தான்” என்று இந்தத் திருத்தத்தின்பின்னணி பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில், “தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி பிறமாநிலங்களில் தமிழை தேர்வு மொழியாக வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் வைப்பது என்பது மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதுபோன்றே படுகிறது. இது ஆபத்தானது. பிற மாநிலங்களில் தமிழை தேர்வு மொழியாக வைத்தால், தமிழ்நாட்டில் இந்தியைதேர்வு மொழியாக வைக்கலாம் என்றஓர் உள்கருத்தும் இதில் புலப்படுகிறது.எனவே முதல்வரின் கருத்து மும்மொழிக்கொள்கையை வழிமொழிவது போலவேஇருக்கிறது. இதுபற்றி முதல்வர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.பிற மாநிலங்களில் தமிழை விருப்பப்பாடமாக சேர்க்க வேண்டும் என்பது,மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகும், என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
பதிவை நீக்கிய முதல்வர்
இந்நிலையில், சர்ச்சை எழுந்த சூழலில், பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து புதன் காலையில் தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவை மாலையில் முதல்வர் பழனிசாமி நீக்கியுள்ளார்.அவர் நீக்கியதற்கு காரணம், மும்மொழிக் கொள்கை பற்றிய தெளிவு பிறந்ததால் அல்ல; பிரதமர் மோடியை நேரடியாக டேக் செய்து தமிழைக் கற்றுத் தாருங்கள் என்று பதிவிட்டிருந்த காரணத்தால், அதை நீக்குமாறு முதல்வருக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும்அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.