tamilnadu

img

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளம் தோழர் என்.சங்கரய்யாவுக்கு வயது 99

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழுவின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், அப்பழுக்கற்ற  பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரருமான அன்புத்தோழர் என்.சங்கரய்யா ஜூலை 15 (இன்று) 99வது பிறந்தநாள் காண்கிறார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப்போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் மாணவர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று மாணவர்களை போராட்டப் பாதையில் அணிதிரட்டினார். பட்டப்படிப்பின் இறுதித்தேர்வை எழுதுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பொய்யாகப் புனையப்பட்ட மதுரை சதிவழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் என்.சங்கரய்யா உள்ளிட்ட தோழர்கள் இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகுதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். விடுதலைக்குப் பின்னரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் என். சங்கரய்யா.

1944ஆம் ஆண்டு ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தின் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தேசியக் கவுன்சில் உறுப்பினர்களில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர்,  உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தன்னுடைய உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் உயர்ந்து அந்த பொறுப்புகளுக்கு பெருமை சேர்த்தவர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று கிராமப்புற மக்களை அணிதிரட்டுவதில் மிகச்சிறந்த பணியாற்றியவர். கீழத்தஞ்சையில் நிலப்பிரபுக்களை எதிர்த்து நடந்த வீரம் செறிந்த போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1944ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற முதல் விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டவர்.

தீக்கதிர் நாளேட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள தோழர் என்.சங்கரய்யா, செம்மலர் இலக்கிய ஏடு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு அரும்பணியாற்றியவர். 1940களில் கலை இலக்கிய வடிவங்களின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களைத் திரட்டியபோது, தோழர்கள் கே.பி.ஜானகியம்மாள், எஸ்.குருசாமி, கே.பாலதண்டாயுதம் ஆகியரோடு இணைந்து தோழர் சங்கரய்யாவும் நாடகங்களில் நடித்துள்ளார்.

மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு, பேரவையில் தமிழக உழைக்கும் மக்களின் குரலாக சங்க நாதம் முழங்கியவர். சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் வரலாற்று ஆவணங்களாக நிலைத்து நிற்பவை. குறிப்பாக தமிழ் ஆட்சி மொழியாகவும், பாடமொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் மாற வேண்டும்; அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழே அரியணை ஏற வேண்டும் என அவர் ஆற்றிய உரைகள் செந்தமிழ் செழித்திட வகை செய்தன.

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை பட்டியலிட்டால் தோழர் சங்கரய்யாவுக்கு அதில் சிறப்பான இடம் உண்டு. தமிழகத்தின் மூலைமுடுக்கிற்கு எல்லாம் சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்தவர். 99 வயதிலும் தேசிய, சர்வதேசிய அரசியல் நிகழ்வுகளை உற்று கவனித்து அவை குறித்து தெளிவான விளக்கம் அளித்து வருபவர். இவரது குரல் இன்றும் பொதுவுடமை இயக்கத்தின் சங்க நாதமாக திகழ்கிறது. அவரது உரையைக் கேட்பவர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றுவதோடு நாட்டு நடப்புகளையும், தொழிலாளர் வர்க்கத்தின் கடமைகளையும், தேசத்தின் திசை வழியையும் தெளிவாக எடுத்துக்காட்டும் திறம் பெற்றவை.

அன்றைய காலகட்டத்திலேயே சாதி, மத மறுப்பு திருமணம் செய்துகொண்ட தோழர் சங்கரய்யா, ஆயிரக்கணக்கான திருமணங்களை அந்த வழியில் நடத்தி வைத்தவர். தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் குடும்பங்களின் பாசமிக்க குடும்பத் தலைவராக திகழ்பவர்.

தம்முடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் கழித்த போற்றத்தக்க தியாக வாழ்வுக்கு சொந்தக்காரரான தோழர் என்.சங்கரய்யா, மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றியவர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நேர்மைக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தோழர் என்.சங்கரய்யா, தன்னுடைய தியாக வாழ்வின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈர்த்தவர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் மதிக்கக்கூடிய மாண்பினைப் பெற்றவர்.

இன்றும் கட்டுப்பாடு மிக்க கம்யூனிஸ்டாகவும், இயன்றவகையிலெல்லாம் இயக்கப்பணியாற்றி மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிற தோழர் என்.சங்கரய்யாவுக்கு பிறந்த நாள் புரட்சிகர நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழக இடதுசாரி இயக்கத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 

;