tamilnadu

img

ஓசூரில் இருந்து விரைவில் விமான சேவை: அமைச்சர்

சென்னை, ஜூலை 17 - ஓசூரில் இருந்து விரைவில் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி னார். போக்குவரத்துத் துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர்,“விமானநிலையங்கள் மற்றும் விமான தளங்களுடன் இணைப்பதற்காக மண்டலங்களுக்குள்  விமான போக்குவரத்து இணைப்பு (உதான்)  திட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்படி குறைந்த கட்டணத்தில் விமான சேவை கிடைக்கும்” என்றார். தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத, குறைந்த பயன்பாட்டில் உள்ள சேலம், வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், ஓசூர், நெய்வேலி, தாம்பரம், அரக்கோணம், செட்டி நாடு, சோழவரம், கயத்தார், சூலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 13 விமான நிலை யங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக சேலம், நெய்வேலி, ஓசூர் விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, சேலம்-சென்னை இடையே விமானம் இயக்கப்படுகிறது. நெய்வேலி விமானநிலையத்தில் உள்கட்ட மைப்பு தயார் நிலையில் உள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் உரிமம் எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அமைச்சர் கூறினார். ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்தி விமானங்கள் இயக்குவதற்கும், வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர்  விமான நிலை யத்தை மேம்படுத்தவும் அரசு கவனம் செலுத்தி  வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில்,  ஓசூர் - சென்னை இடையே விமானத்தை  இயக்க தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய ஒப்பு தல் கிடைத்ததும் அதற்கான சேவை தொடங்கும். இந்த விமானத்தில் 50 விழுக்காடு  கட்டணம் 2ஆயிரத்து 500 ரூபாக்கு குறைவாக  இருக்கும். மீதம் உள்ள கட்டணத்தை விமான  நிறுவனம் நிர்ணயித்துக் கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

;