tamilnadu

img

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு யுனெஸ்கோ எச்சரிக்கை

ஈரானின் கலாச்சாரச் சின்னங்களைத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் அட்ரே அஜோலே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈரான் புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமானியை, அமெரிக்க ராணுவம் கொலை செய்தது. இந்த கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவோம் என்று ஈரான் அரசும் தெரிவித்திருந்தது. இதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்விட்டரில் கூறுகையில், " எங்கள் நாட்டைச் சேர்ந்த 52 நபர்களைச் சிறைபிடித்து வைத்திருக்கிறீர்கள். அதுபோல ஈரானில் உள்ள 52 முக்கியமான இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம். அமெரிக்க மக்களுக்கோ, சொத்துகளுக்கோ சேதம் ஏற்பட்டால் அந்த 52 இடங்களை அழித்துவிடுவோம்" என எச்சரிக்கை விடுத்தார்.

ட்ரம்பின் இந்த ட்விட்டர் பதிவுக்கு, ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் எந்தவிதமான முரண்பாடுகள், போர் ஏற்பட்டாலும் கலாச்சார சின்னங்களுக்கு மதிப்பளித்து, சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து செயல்படுவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதை நினைவில் வைக்க வேண்டும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 

;