tamilnadu

img

மும்பையை வீடாக மாற்றிய 1,50,000  பிளமிங்கோக்கள்

மும்பை:
கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில், பிளமிங்கோ பறவைகள் மும்பையில் உற்சாகமாக சுற்றித் திரிகின்றன. கிட்டத்தட்ட 1,50,000 பிளமிங்கோக்கள் மும்பையை தங்கள் வீடாக மாற்றியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் வாகனப் புகை, மாசு, காற்றில் தூசு குறைந்துள்ளதால் குரங்குகள் அதிகமாக வெளியே சுற்றுகின்றன. டால்பின்கள் கங்கை ஆற்றில் காணப்படுகிறது.
1980-ஆம் ஆண்டுகளிலிருந்து ஃபிளமிங்கோக்கள் இந்திய பெருநகரங்களுக்கு உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்தாண்டு  பறவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு கொரோனா ஊரடங்கும் காரணமாக இருக்கலாம்.

பிளமிங்கோக்கள் பொதுவாக ஆறு, ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நீந்தும். மும்பையில் தற்போது நீர்நிலைகள் சுத்தமாக உள்ளன. இதனால் பிளமிங்கோக்களின் வருகை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 1,50,000 பிளமிங்கோக்கள் வந்துள்ளன. ஏரிகளில் வாத்துகள்போல நீந்தும் இவை தற்போது காட்டுப்பகுதியில் இருந்து நகரத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. வருடத்தில் சில மாதங்கள் பிளமிங்கோக்கள்  அரபிக்கடலில் இருந்து மும்பை வருவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகளவில் மும்பை வந்துள்ளன. இது குறித்து, மும்பை நேச்சுரல் ஹிஸ்ட்ரி சொசைட்டி தலைவர் ராகுல் கோட் கூறுகையில், "பிளமிங்கோக்கள் பொதுவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மே வரை மும்பைக்கு அதிகளவில் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வருகை தரும். கடந்தாண்டு ஒரு லட்சத்து முப்பத்து நான்காயிரம் பிளமிங்கோக்கள் மும்பை நகரத்துக்கு வருகை தந்தன. தற்போது கொரோனா ஊரடங்கை அடுத்து பிளமிங்கோ வருகையில் சாதனை நிகழும்" என்றார்.

பறவைகள் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் தீபக் ஆப்தே கூறுகையில், "ஊரடங்கு பறவைகளுக்கு அமைதியை அளிக்கிறது, உணவைப் பெறுவதற்கான முயற்சியில் எந்த இடையூறும் இல்லை. ஊரடங்கு 1.3 பில்லியன் மக்களை வீட்டில் முடக்கிவைத்துள்ளது. மும்பை பெருநகரமே அமைதியாக உள்ளது. மும்பை நகரத்தின் நீர் நிலைகளில் கூட பிளமிங்கோக்களுக்கு உணவு தேடும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.
-எக்கனாமிக்ஸ் டைம்ஸ், சிஎன்என் இணையதளங்களிலிருந்து
 

;