tamilnadu

img

அத்வானி, ஜோஷியையே தூக்கி எறிவதா?

மும்பை, ஏப். 1 -


பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யாக இருக்கும் சத்ருகன் சின்கா, பாஜக-விலிருந்து விலகியுள்ளார். விரைவில் காங்கிரசில் இணையும் அவர், பழையபடி பாட்னா சாகிப் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள சத்ருகன் சின்ஹா அதில் கூறியிருப்பதாவது:பாஜக-வில் நீண்ட காலம் பணியாற்றிவிட்டு தற்போது விலகுவது வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.வாஜ்பாய் காலத்தில் கூட்டாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் இப்போதோ இரு நபர்கள் மட்டுமே முடிவு எடுக்கும் வகையில் பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் நான் சேருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது பழமையான கட்சி, இந்த கட்சியில் காந்தி, பட்டேல், நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இருந்தனர் என்பதுடன் பாட்னா சாகிப் தொகுதி எனக்கே ஒதுக்கப்படும் என்பதும் முக்கியக் காரணமாகும்.பாஜகவிலிருந்து நான் விலகியவுடன் மம்தா, அகிலேஷ், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அவர்களது கட்சிக்கு என்னை அழைத்தனர். ஆனால் பாட்னா சாகிப் தொகுதிக்காக அந்த அழைப்புக்களை நான் ஏற்கவில்லை. ஏனென்றால், கடந்த 2014-இல், பாட்னா சாகிப்பில், நான் மோடி அலையால் வெற்றிபெறவில்லை என்பதைக் காட்டியாக வேண்டும். எனது சொந்த முயற்சியாலேயே நான் வெற்றிபெற்றேன் என்பதை நிரூபித்தாக வேண்டும்.எனது நண்பர், வழிகாட்டி, தத்துவவாதியான எல்.கே. அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்கா, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களைக் கூட, அப்போது நான் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. இவ்வளவு ஏன், எனது மகளும் நடிகையுமான சோனாக்சி சின்காவை கூட அழைக்கவில்லை. பாஜக என் மீது நடவடிக்கை எடுப்பதாக நீண்ட காலமாக மிரட்டி வருகிறது. அதற்கு பதில் தரும் சரியான தருணம் இதுதான் என கருதுகிறேன்.இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.


;