tamilnadu

img

‘வேந்தர்களுக்கும் வேளிர்களுக்கும் நடந்த வர்க்கப் போராட்டமே வேள்பாரி’

‘வேந்தர்களுக்கும் வேளிர்களுக்கும் நடந்த வர்க்கப் போராட்டமே வேள்பாரி’

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் 

இரண்டு நாவல்களின் வேறுபாடு

 “தமிழ் இலக்கிய மாணவர்கள், பண்டிதர்கள் மட்டுமே வாசிக்கக்கூடியதாக ‘காவல் கோட்டம்’ நாவல் உள்ளது. ஆனால் மிக எளிமையான தமிழில் வேள்பாரி நாவலைச் சராசரி வாசகர் உள்ளிட்ட அனைவரும் வாசிக்கும் வகையில் படைத்துள்ளார். இந்த இரு படைப்புகளுக்கும் இடையே வெவ்வேறு பாணியை சு. வெங்கடேசன் பின்பற்றியுள்ளார்.  வரலாறு திரும்புகிறது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை கல்கி 75 ஆண்டுகளுக்கு முன் 1950-54 காலக்கட்டத்தில் படைத்தபோது நாவலுக்கான சித்திரங்களை வரைந்தவர் மணியம். 75 ஆண்டுகளுக்குப் பிறகு கல்கியின் எளிமையான உரைநடை பாணியை சு. வெங்கடேசன் கைக்கொண்டுள்ளார். அவரது வேள்பாரி நாவலுக்குச் சித்திரங்களை வரைந்தவர் மணியத்தின் மகன் செல்வம் என்பது வரலாறு திரும்பியுள்ளதைக் காட்டுவதுடன், மற்றொரு கல்கியாக சு. வெங்கடேசன் நம்மிடையே வீற்றிருக்கிறார்.  பறம்பு மலையுடன் தொடர்பு  பறம்பு மலை எனது தொகுதியை ஒட்டியிருப்பதால் எனக்கும் வேள்பாரிக்கும் உறவு இருக்கிறது. எனது தொகுதியில் சிங்கம்புணரி அருகே பிரான் மலை என்ற மலை இருக்கிறது. இப்பகுதியில் ‘பாரி வள்ளல்’ என்ற ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வர்க்கப் போராட்டத்தின் சித்திரிப்பு  வேந்தர்களுக்கும் வேளிர்களுக்கும் நடைபெறும் போராட்டமே வேள்பாரி நாவல். சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வலிமையாக இருந்தபோது அவர்களுக்கு எதிராக நேருக்கு நேர் நின்ற பாரி தேர்வுசெய்யப்படாத அரசனாக இருந்தான். பாரி வாழ்ந்த பகுதி அரசு நாடல்ல. அவரும் அரசனல்ல. வேளாண் குடிகளின் தலைவனாக இருந்தவன். வேந்தர்களிடமிருந்து எப்படித் தற்காத்தான் என்பதைச் சுவையான கதையாக, சுவையான வர்க்கப் போராட்டத்தை ‘வர்க்கப் போராட்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் இந்த நாவல் சித்திரிக்கிறது.  அதனால்தான் அத்தகைய வேளிர் குடித் தலைவன் குறித்து சு. வெங்கடேசன் எழுத முடிவுசெய்து வேள்பாரி நாவலைப் படைத்துத் தந்துள்ளார்.  எதிர்கால எதிர்பார்ப்பு  தொடர்ந்து விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் போராடுபவராகவும், அவர்கள் குறித்து எழுதுபவராகவும் சு. வெங்கடே சன் இருக்க வேண்டும்.   உழைக்கும் வர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கும். அவை சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கும். நிலவுடைமையாளர்கள் பன்னாட்டு நிறுவன உரிமையாளர்களாக உருமாற்றம் பெற்றுள்ளனர். இத்தகைய வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதாக உள்ளது. வளர்ச்சியடைந்த அல்லது வளர்ச்சி பெறும் சமூகத்தில் எப்போதும் பாட்டாளி வர்க்கம் இருக்கும். பாட்டாளி வர்க்கமும் வசதி படைத்ததாக மாறும்.  போராட்டங்களைப் பதிவுசெய்யும் மிகச் சிறந்த எழுத்தாளராக சு. வெங்கடேசன் திகழ்கிறார். அவர் பாரி போன்ற சங்ககாலத்தை மட்டும் பதிவுசெய்பவராக இருக்கக் கூடாது. தற்காலப் போராட்டங்களையும் படைப்புகளில் பதிவுசெய்ய வேண்டும்.  ஞானபீட விருது எதிர்பார்ப்பு  சிறந்த பல நாவல்களை எழுதிய அகிலனுக்கு ‘சித்திரப் பாவை’ என்ற நாவலுக்காக 1975-ஆம் ஆண்டும், படைப்புகள் அனைத்துக்குமாக ஜெயகாந்தனுக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீட விருது என தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கும் மட்டுமே இந்த விருது கிடைத்துள்ளது.  இந்த ஆண்டு ஞானபீட விருதுக்கு சு. வெங்கடேசனின் படைப்பும் எடுத்துக்கொள்ளப்படும் என நம்புகிறேன்.  சரித்திர நாவலின் சவால்கள்  சமகால விமர்சனங்களைத் தவிர்க்கச் செய்யும் வாய்ப்பு சரித்திர நாவல்களை எழுதுவதில் உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறது. சமகாலத்தில் நடைபெறும் போராட்டங்களையும் சு. வெங்கடேசன் எழுத்துகளில் பதிவுசெய்ய வேண்டும்.   சரித்திர நாவலை எழுதக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. சான்றுகளையும், கல்வெட்டுகளையும், ஸ்தல புராணங்களையும், ஓலைச்சுவடிகளையும், வரலாற்று நூல்களையும் படித்தும் எழுத வேண்டும் என்பதைக் கல்கி குறித்து வாசிக்கும்போது அறிய முடிகிறது.”