tamilnadu

ஒரே உடை - - வல்லம் தாஜுபால்

வருடா வருடம்
இரு கோடி வேலை என
புருடா விட்ட அரசிடம் இளைஞர்கள்
ஜாப் ஜாப் என்றனர்
அரசோ திசைதிருப்ப
ஹிஜாப் ஹிஜாப் என்கிறது

சகுனியும் கூனியும்
சத்தியத்தின் காப்பரா?
நரபலி அரக்கரே
குழந்தைகளின் மேய்ப்பரா?
முக்காட்டைக் கொடுத்து
கல்வியைப் பெறுவது
மெகா எக்சேஞ்சு ஆஃபரா?

உடை உரிமையினை உடை என்று
தீர்ப்பினால் நீக்கினார்
தீன் குலத்தின் முக்காடு - இது
நீதி தேவதையைத்
துகிலுரியும் ஏற்பாடு

சட்டம் இங்கோர்
இருட்டறை என்றே ஊர் பேசும்
கிட்டிய தீர்ப்போ
மேலுமதை இருட்டாக்கத் தார் பூசும்

இரண்டு மீட்டர்
முக்காட்டை எதிர்த்தார்கள்
இருபதாயிரம் பேர்தேர்வு
எழுதாமல் தடுத்தார்கள்

முஸ்லிம் பெண்களுக்குக்
கல்வியை மறுக்க
முக்காட்டுப் பிரச்னையை
மூட்டு கின்றார்கள்

குஷ்வந்த் சிங்குக்குத் தலைப்பாகை
குல்ஜார் பேகத்துக்கு முக்காடு
அவரவர் அடையாளம்
அவரவர் சுதந்திரம்

இமயத்தைத் தொடுவதே
எளிதாய் இருக்கையில் மற்றவர்
இதயத்தைத் தொட ஏன்
இத்தனை தடைகள்?

பட்டினில் நெய்கின்றோம்
பஞ்சினில் நெய்கின்றோம் - இனி
எட்டுத் திசையிலும்
ஒற்றுமை நெய்திடுவோம்
- வல்லம் தாஜுபால்