வருகின்ற தேர்தலுக்குள் பழைய பென்ஷன் திட்டம் வந்து சேருமா? கும்பகோணம் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் கேள்வி
கும்பகோணம், ஆக. 30- தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் மாவட்ட ஐந்தாவது மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. மாநாட்டில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றி, வருகின்ற தேர்தலுக்குள் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தார். மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர் இரா.கலியமூர்த்தி தலைமை வகித்தார். கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய மாநாட்டு பேரணியை மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் துவக்கி வைத்தார். மாவட்ட தணிக்கையாளர் சமுதாயக்கனி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் கும்பகோணம் வட்ட தலைவர் துரைராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் மா.கண்ணன் மாநாட்டைத் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்மணி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். சிறப்புரையாற்றிய பாலபாரதி, அரசின் பல்வேறு பணிகளை மக்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் அரசு ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் இப்போது பணி ஓய்வுக்குப் பிறகு அரசு ஓய்வூதியர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அவர்களில் தற்போது இரண்டே கால் லட்சம் பேர்தான் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள் என்றும், 2003க்குப் பிறகு 7 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலை உள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியாக பழைய பென்ஷன் ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியது இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் விமர்சித்தார். ஓய்வூதியர்கள் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு மருத்துவ காப்பீடு போதவில்லை என்றும், தற்போதுள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான போதிய தொகை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மாநாட்டில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சூரியமூர்த்தி, கும்பகோணம் வட்டச் செயலாளர் பகிரிசாமி, பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான தகுதி சரிபார்ப்பு மூலம் அனைத்து ஓய்வூதியர்களையும் பணி ஓய்வு அடிப்படையில் தனியே பிரிக்கும் சட்டவிரோத போக்கை கைவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள புதிதாக நியமித்த ஓய்வூதிய ஆலோசனை குழுவை ரத்து செய்து கொடுத்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரப்பட்டது. 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் புதிய தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.கலியமூர்த்தி மாவட்ட தலைவராகவும், ஆர்.பன்னீர்செல்வம் செயலாளராகவும், எஸ்.கோவிந்தராஜ் பொருளாள ராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்மணி, பூபதி, பால்ராஜ், சுத்தானந்தம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலசுப்பிரமணியன், பிச்சமுத்து, வெங்கடேசன், செல்வி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும், சமுதாயக்கனி, விஸ்வநா தன் ஆகியோர் தணிக்கையாளர்களா கவும் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
 
                                    