மதுரை:
வரலாற்றுப் பெருமை மிக்க மதுரை மாநகர் “ஸ்மார்ட் சிட்டி,” என்ற பெயரை தற்போது சூட்டிக்கொண்டிருக்கிறது.
“ஸ்மார்ட் சிட்டி,”-யான மதுரைமாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது என்பதை தகவல் அறியும் சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் (11.11.2020) உறுதிப்படுத்துகின்றன.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்கள் உள்ளன. பழங்காநத்தத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையையும் கணக்கில் சேர்த்துக்கொண்டால் மொத்த எண்ணிக்கை 32 ஆகும். 32 மருத்துவமனைகளில் மொத்தம் 23 பெண் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களிலும் எட்டுப் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். எட்டு மருத்துவர்கள் (Doctors) காலிப் பணியிடங்கள் குறித்துஎந்த தகவலையும் மாநகராட்சி வழங்கவில்லை. இந்த மருத்துவமனைகளில் மொத்தமே நான்கு அறுவைச் சிகிச்சை அரங்குகள் தான் உள்ளன. இதில் இராயலு அய்யர் மருத்துவமனை அறுவைச் சிகிச்சை அரங்கு கொரோனாகாரணமாக தற்போது செயல்பாட்டில் இல்லை. செல்லூர், புதூர் மருத்துவமனைகளில் உள்ள அறுவைச் சிகிச்சைஅரங்குகளை மீண்டும் செயல்பாட் டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 32ல் 21 மருத்துவமனைகளில் தொலைபேசி வசதி இல்லை.
இரண்டு அறுவைச் சிகிச்சை அரங்குகள் எவ்வளவு நாளாக பூட்டப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. மருத்துவர் காலிப்பணியிடங்களும் எவ்வளவு நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது எனத் தெரியவில்லை.மதுரையில் உள்ள அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, அமைச்சர் ஆர். பி.உதயகுமார் மட்டுமல்ல அந்தத் தொகுதிசட்டமன்ற உறுப்பினர்களும் முதற்கட்டமாக மருத்துவமனைகளுக்கு தொலை பேசி இணைப்பை பெற்றுத்தர வேண்டும்.காலியாக உள்ள மருத்துவர் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.