ரயில்வே கூட்ஸ்ஷெட் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கையை வென்றெடுப்போம்
உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் நம்முடைய ரயில்வே துறை. ரயில்வேயின் மொத்த வருவாயில் 70 சதவிகிதம் சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கிறது. சரக்கு போக்குவரத்தின் முதுகெலும்பாக திகழ்வது கூட்ஸ்ஷெட் சுமைப்பணி தொழிலாளர்கள்தான். அடிப்படை வசதிகள் மறுப்பு இந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும் இல்லை, நிரந்தர வருமானமும் இல்லை, குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லை. பல கூட்ஸ்ஷெட்டுகளில் சிஐடியு தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான போராட்டம் மூலம் சிறிய அளவிலான ஓய்வறை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து கூட்ஸ்ஷெட்டுகளிலும் இல்லை. 24 மணி நேர பணியின் பிரச்சனைகள் தற்போது 24 மணிநேரமும் பணி என்ற நிர்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. சுமைப்பணி மிகவும் கடுமையான பணி. இரவு நேரங்களில் பணி செய்யும்போது தொழிலாளர்கள் பல்வேறு விபத்துக்குள்ளாகிறார்கள். கூட்ஸ்ஷெட் பிளாட்பாரத்தில் விளக்கு வெளிச்சம் இருந்தாலும், ரயில்வே வேகன்களுக்கு உள்ளே போதுமான வெளிச்சம் இல்லை. 24 மணிநேர பணி அமல்படுத்தியதால் சரக்குகளைக் கொண்டு வருபவர்கள் மிகவும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். டெமரேஜ் என்ற பெயரில் பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கிறது. முன்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நேரம் இருந்தபோது பெரும் நிறுவனங்கள் முதல் அனைவரும் சிரமமின்றி ரயில்வே மூலம் சரக்குகளை வெகுவாகக் கையாண்டார்கள். தற்போது நிறுவனங்கள் ரயில்வே மூலம் சரக்குகளைக் கொண்டு வர தயக்கம் காட்டுகின்றன. பணி குறைவும் பராமரிப்பின்மையும் இதனால் பல கூட்ஸ்ஷெட்டுகளிலும் பணி வெகுவாகக் குறைந்துவிட்டது. சில கூட்ஸ்ஷெட்டுகளில் பிளாட்பாரங்கள் மோசமான நிலையில் உள்ளன. சுமைப்பணி தொழிலாளர்கள் பணி செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. அடையாள அட்டை கூட ரயில்வே நிர்வாகம் வழங்க மறுக்கிறது. சம்மேளனத்தின் கோரிக்கைகள் ரயில்வே நிர்வாகத்திடமும் சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களிடமும் தமிழ்நாடு சுமைப்பணி சம்மேளனம் முன்வைக்கும் கோரிக்கைகள்: தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே கூட்ஸ்ஷெட் சுமைப்பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ பலன்கள் அமல்படுத்த வேண்டும். அனைத்து கூட்ஸ்ஷெட்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளியலறை, கழிப்பிட வசதிகளுடன் கூடிய ஓய்வறை அமைத்துக் கொடுக்க வேண்டும். கூட்ஸ்ஷெட் சுமைப்பணி 24 மணிநேரமாக இருப்பதை ஏற்கனவே இருந்த அடிப்படையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்ற வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து கூட்ஸ்ஷெட்டுகளிலும் பணியின்போது அடிபட்டால் முதலுதவி சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.