tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான எச்சரிக்கை

விழுப்புரம், அக்.21- மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை விட்டு விட்டு பெய்து வந்தது, தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்தும்,விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக்கிறது. விழுப்புரத்தில்  வானம் மேகமூட்டத்துடனே  மழை பெய்து வருகிறது,அதன் பிறகு சிறிது நேரம் வெயில் தலைகாட்ட தொடங்கி,மீண்டும் திடீர் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி வருகிறது. தற்போது பெய்து வரும் இந்த மழையால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், தண்ணீரில் நனைந்தபடி சென்றதை காண முடிகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கை ரெட் அலார்ட் எச்சரிக்கையால் முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளிலையும் முடுக்கி விட்டு தயார் நிலையில் வைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை திரும்பும் வெளியூர் மக்கள்  ஆத்தூர் சுங்கச்சாவடியில் 4 கி.மீ தூரம் வரை அணிவகுத்த வாகனங்கள்

மதுராந்தகம், அக்.21- தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் வாகனங்களால் மதுராந்தகம் அருகில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடிகள் செவ்வாயன்று (அக்.21)  மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறைகாரணமாக சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்து ஊர்களுக்கு கார்கள் மற்றும் பேருந்து களில் சென்றனர். விடுமுறை முடிந்து செவ்வாயன்று மாலை இவர்கள் சென்னை திரும்பியதால் சுங்கச் சாவடிகளில் அதிக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திங்கட்கிழமை பள்ளி மற்றும் கல்லூரி வேலை நாட்கள் என்பதால்  செவ்வாயன்று இரவே சென்னை நோக்கி  செல்ல அனைவரும் தயாரானார்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டாய  கட்டணம் வசூலிக்க படுவதால்  போக்குவரத்து நெரிசலானது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு  4 மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். புதன்கிழமை காலையும் வாகனங்கள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, அக்.21 கனமழை எச்சரிக்கை காரணமாக புதன்கிழமை (அக்.22) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதனை கல்வித்துறை அமைச்சர்  ஆ. நமச்சிவாயம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.