சேதமடைந்த அலுவலகங்களை புதுப்பிக்காத அரசு அதிகாரிகள் சாராட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா
சிதம்பரம், ஆக.12- சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காத சிதம்பரம் சாராட்சியரைக் கண்டித்து சாராட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீ முஷ்ணம் உள்ளிட்ட வட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பல்வேறு இடங்களில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கிராம நிர்வாக அலுவலகத்தில் சமூகவிரோதிகள் சேர்ந்து மதுபானங்கள் அருந்தி, போதைப் பொருட்கள் பயன்படுத்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டுச் செல்வது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். கிராம நிர்வாக அதிகாரிகள் மீது அலுவலகத்திலும், அலுவலகத்திற்கு வெளியிலும் சமூக விரோதிகளால் தாக்கு தல் நடத்தப்படுவதால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றி அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்திற்கு கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதியும் இல்லை, நிர்வாக அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் அமர நாற்காலி தற்காலிகள் கூட இல்லை என்றும் கூறினர். இந்த தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்ப தாகக் சாராட்சியர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.