பொறையார், பூம்புகார் கல்லூரிகள் முன்பு பல்கலை. ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்
மயிலாடுதுறை, அக். 14- பேராசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் த.பே.மா.லு கல்லூரி கிளை தலைவர் முனைவர். சேவியர் செல்வகுமார் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. போராட்டத்தில், அனைத்து பேராசிரியர்களும் கருப்பு ஆடைகளை அணிந்து கலந்து கொண்டனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டினை அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கியது போல அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அதனுடைய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் மற்றும் எம் பில், பிஎச்டி க்கான ஊக்க ஊதிய தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்கத்தின் கிளைச் செயலாளர் ரமேஷ் பாபு, பொறுப்பாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்ற இப்போராட்டத்தில் மண்டலப் பொருளாளரும், கிளைப் பொருளாளருமான ஸ்ரீதர் தங்கதுரை நன்றி கூறினார். அதேபோன்று பூம்புகார் கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பூம்புகார் கல்லூரி கிளைத் தலைவர் கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ரமேஷ், பேராசிரியர் சிவராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர். கிளைதுணைத் தலைவர் காமராஜ் நன்றி கூறினார். 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
