tamilnadu

பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.56 லட்சம் பறிமுதல்

பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத  ரூ.1.56 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை, அக். 16-  புதுக்கோட்டையிலுள்ள பொதுப்பணித் துறை, தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொதுப்பணித் துறையின் தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக சண்முகவேல் உள்ளார். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆய்வாளர் பீட்டர் உள்ளிட்ட காவல்துறையினர் புதன்கிழமை பகலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செயற்பொறியாளர் சண்முகவேல் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.