tamilnadu

img

குருகுல முறையைக் கொண்டு வரும் யுஜிசி

 நிலவுடமை சுரண்டலை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு நூலை அடிப்படையாகக் கொண்டு நவீன கல்வி முறையை வகுப்பது சமூகநீதிக்கு, மட்டுமல்ல மனிதநீதிக்கே எதிரானதாகும்.

ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை ஒன்றியமயம், காவிமயம், கார்ப்பரேட்மயம் என்ற மும்மயத்தை குவிமையமாகக் கொண்டே உரு வாக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கச்சிதமாக மதிப்பிட்டார். இந்தக் கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படும்போது பல்வேறு விபரீதங்கள் விளையும் என்றும் அவர் எச்சரித்தார். அது  கொஞ்சம் கொஞ்சமாக உண்மையாகி வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருவதுபோல காட்டிக் கொண்டாலும், உண்மையில் சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பையே அது நோக்கமாகக் கொண்டுள்ளது. சமஸ்கிருதத்தை திணிப்ப தற்கான அனைத்து முயற்சிகளும் ஒன்றிய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறத்தில் பண்டைய வேதகால கல்வி முறையை நோக்கி இந்திய நவீன கல்விமுறை யை நகர்த்திச் செல்லும் வேலையும் நடை பெற்று வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு மதன் மோகன் மாளவியா பெயரில் மாளவியா ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

மதன் மோகன் மாளவியா இந்துமகா சபாவை உருவாக்கியவர் என்பதிலிருந்தே அவ ரது முகவிலாசத்தை புரிந்து கொள்ள முடியும். பகவத்கீதை மற்றும் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதாக பயிற்று விக்கும்முறை இருக்க வேண்டும் என்றும் குருகுல முறை மற்றும் குரு சிஷ்ய பரம்பரை முறையில் ஆசிரியர் பயிற்சி அமைய வேண்டும் என்றும் மாளவியா ஆசிரியர் பயிற்சித் திட்டம் கூறுகிறது. அத்துடன் நில்லாமல் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை தர்மம், புண்ணியம், ஆத்மா, கர்மா, யாகம், சக்தி, வர்ணா, சாதி, மோட்சம், லோகம், இதிகாசம், தானம் ஆகிய எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்திய அறிவுமுறையின் அடிப்படையில் வகுக்க வேண்டும் என்றும் யுஜிசி கூறியுள்ளது. மாளவியா ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் அடிப்படையில் 111 இடங்களில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கவும், யுஜிசி முடிவு செய்துள்ளது. அடுத்த மூன்றாண்டு களில் 15லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பேராசிரியர் ஸ்ரீபதா பட் கூறுகையில், இது ஆர்எஸ்எஸ் கொள்கையை பரப்பும் கல்வித் திட்டம். நவீன கல்விமுறை என்பது அறிவியல் மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வேதகாலத்தை நோக்கி இந்திய கல்விமுறையை செலுத்த முயல்கிறார்கள் என்று கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் ஆலோசனையானது அதிகாரப்பூர்வ கல்விப் புலத்தில் இந்துத்துவா புராணக் கட்டுக்கதை களை சட்டப்பூர்வ வரலாறாக மாற்ற முயலு கிறது என்றும் ஒரு புதிய இந்துத்துவா அடை யாளத்தை உருவாக்கும் வெட்கக்கேடான செயல் இது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் நிலோத்பல் பாசு விமர்சித்துள்ளார்.

குருகுல முறை, குருசிஷ்ய பரம்பரை என் றெல்லாம் இவர்கள் வியந்தோதுகிற பழைய கல்விமுறை என்பது அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கும் அநாகரிக முறையே ஆகும். நவீனக் கல்விமுறையும் அறிவியலும் அனைத்தையும் கேள்விக்கேட்குமாறு தூண்டு கிறது. ஆனால் மனுஸ்மிருதி விதாண்டாவாதம் செய்பவர்களுக்கு எதையும் சொல்லக்கூடாது என்றும் எல்லாம் அறிந்தவனாக இருந்தாலும் குருவின் முன்பு வாய்திறக்காதவனுக்கே பாடம்  சொல்லித் தர வேண்டும் என்றும் போதிக்கிறது. (மனுஸ்மிருதி-2, 110) சீடன் குருவை பழித்தால் கழுதையாகவும், நிந்தித்தால் நாயாகவும், குருவின் செல்வ த்தை அனுபவித்தால் கிருமியாகவும், அவர் மீது பொறாமைப்பட்டால் புழுவாகவும் மறுபிறவி யில் பிறப்பார்கள் என்கிறது மனுஸ்மிருதி. (மனுஸ்மிருதி-2, 201) குருகுல முறையில் நம்முடைய பல்கலைக் கழகங்கள் மாறுகிற போது யார் யாருக்கு மறு பிறப்பில் என்னென்ன நேருமோ என நினை த்தாலே நடுக்கம் வருகிறது. அதுமட்டுமல்ல, குருவுக்கு எண்ணெய் தேய்த்துவிடுவது மட்டுமல்ல, அவரது மகனுக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவதோடு பாதத்தையும் கழுவவேண்டும் என்றும் (2, 209). சீடர்கள் பிரம்மச்சாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தலையை முழுமையாக மொட்டை யடித்துக் கொள்ள வேண்டும் அல்லது முழுமை யாக சடை வைத்து குடுமி வைத்துக் கொள்ள லாம் அல்லது சிறிய குடுமி மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பகுதியை மழித்துக் கொள்ள லாம்(3, 219) என்றெல்லாம் சொல்லிச் செல்கிறது மனுஸ்மிருதி.

தனது ஆசிரியரின் காலை அமுக்கிவிட்டு படித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள் ளார். அவர் போல இனி எல்லா மாணவர்களும் செய்ய வேண்டியிருக்குமோ? புதிய கல்விக்கொள்கை முழுமையாக அம லானபிறகு பல்கலைக்கழக வளாகங்கள் பார்க்க படுஜோராக இருக்கும். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து சாதியினரும் கல்விக் கற்பதை மனுஸ்மிருதியோ, குருகுல கல்விமுறையோ, குருசிஷ்ய பரம்பரையோ அனுமதிப்பதில்லை. இதை மீறி பிராமணர்கள் மற்ற சாதியின ருக்கு கல்வி கற்பித்தால் அவர்களுக்கு கடுமை யான தண்டனை உண்டு என்றும் மிரட்டுகிறது மனுஸ்மிருதி. கடுமையான இந்த சட்டங்களை நியாயப் படுத்த பல்வேறு புராணக் கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கதையை மட்டும் பார்ப்போம். குந்தியின் மகனாக பிறந்த போதும் ஆற்றில் விடப்பட்டு தேரோட்டியினால் வளர்க்கப்பட்டதால் கர்ணன் சத்ரியனாக ஏற்கப்படவில்லை. பஞ்சபாண்டவர்களின் குருவான துரோணரிடம் வில்வித்தை கற்க கர்ணன் சென்ற போது சாதியைக் கேட்டு அவனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார் துரோணர். பிராமணர்களுக்கு மட்டுமே வித்தையை கற்றுத் தருவேன் என்பதில் பரசுராமர் உறுதியாக இருந்தார். தன்னை ஒரு  பிராமணன் என்று பொய் சொல்லி பரசுராமரி டம் கல்விகற்று வருகிறான் கர்ணன்.

ஒரு நாள் கர்ணனின் தொடையில் தலை வைத்து பரசுராமர் உறங்கிக் கொண்டிருக்க, ஒரு வண்டு கர்ணனின் தொடையைக் குடைய ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. குருதி வெள்ள மெனப் பாய அந்த ஈரத்தில் விழித்துக் கொண்ட பரசுராமர் இவ்வளவு பெரிய துன்பத்தை தாங்கிக் கொண்ட நீ பிராமணனாக இருக்க முடி யாது. நீ யார் என்று கேட்க, நான் ஒரு சூதன் என்று கர்ணன் உண்மையைச் சொல்ல பிரா மணனாக இல்லாத ஒருவனிடம் பிரம்மன் நிச்சயமாக வசிக்கமாட்டான். நீ கற்ற வித்தை உனக்கு தேவைப்படும் போது மறந்து போய்விடும் என சாபம் விட்டதாக மகாபாரதக் கதை கூறுகிறது. இதையெல்லாம் சுவையான கற்பனைகள் என்று எடுத்துக் கொண்டால் பரவா யில்லை. இதையெல்லாம் மீண்டும் நடை முறைப்படுத்த ஆரம்பித்தால் என்னவாகும்? அறிவியல் வகுப்புகளில் வேதியியல் மாற்றம் குறித்தும் உயிரின் தோற்றம் குறித்தும் பயிலவேண்டுமேயன்றி, பாவம், புண்ணியம், கர்மா என்றெல்லாம் படித்துக் கொண்டிருந்தால் அறிவியல் அழிந்து போகாதா?  நான்கு வர்ணங்களை நான்தான் படைத்தேன், நானே நினைத்தால் கூட அதை மாற்ற முடியாது என்று பகவானே கூறியதாக பகவத் கீதையில் எழுதி வைத்துள்ளனர். சாதி அமைப்பை கெட்டிப்படுத்துவதற்காகவும் நியாயப்படுத்துவதற்காகவுமே பகவத் கீதை  உருவாக்கப்பட்டதாக டாக்டர் அம்பேத்கர் கூறு கிறார். இதனடிப்படையில் உருவாக்கப்படும் கல்விமுறை ஜனநாயகத் தன்மை கொண்ட தாகவோ, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதாகவோ இருக்க முடியுமா?

அவரவர் சாதிக்கென்றும், வர்ணத்திற் கென்றும் வகுக்கப்பட்ட தொழிலையே அவரவர் செய்ய வேண்டும் என்று கீதை பல இடங்களில் அழுத்தமாக கூறுகிறது. இதை மறைமுகமாக நடைமுறைப்படுத்தவே ஒன்றிய பாஜக கூட்டணி அரசு ‘விஸ்வகர்ம யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கல்விக் கூடங்களிலிருந்தே இதற்கான ஆயத்தப்பணி களை துவங்குமாறு கூறுகிறது பல்கலைக்கழக மானியக்குழு. ஒரு சாதியான் மற்றொரு சாதியான் தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும் அது நன்மை பயக்காது, ஒருவன் தன் தொழி லை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்த வன் தொழிலை செய்யவே கூடாது என்கிறது பகவத் கீதை. நிலவுடமை சுரண்டலை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு நூலை அடிப்படையாகக் கொண்டு நவீன கல்வி முறையை வகுப்பது சமூகநீதிக்கு, மட்டுமல்ல மனிதநீதிக்கே எதிரானதாகும். பாஜக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்திய சமூகம் மீண்டும் ஒரு மூடுண்ட சமூகமாக மாறிவிடும். அதனால் இவர்களை ஒன்றிய ஆட்சியிலிருந்து அகற்று வதே அனைவர் முன்பும் உள்ள ஜனநாயகக் கடமையாகும்.