உ. வாசுகி கியூபா பயணம் : தலைவர்கள் வாழ்த்து
உலகின் பல்வேறு நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் தத்துவார்த்த பத்திரிகை ஆசிரியர்களுக்கான மாநாடு, கியூபாவில் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ‘மார்க்சிஸ்ட்’ தத்துவ ஏட்டின் ஆசிரியரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான உ.வாசுகி கலந்து கொள்கிறார். அக்டோபர் 15 முதல் 20 வரை கிரான்மா, ரிபல்டே பத்திரிகைகளின் சர்வதேச திருவிழா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் உ. வாசுகி, ‘ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத்துறை தலைவர்களையும், கியூப பெண்கள் அமைப்பையும் சந்தித்து கலந்துரையாடுகிறார். மேலும், கியூப ஜனாதிபதியும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான மிகுவெல் டயஸ் கனால் பங்கு பெறும் நிறைவு நிகழ்ச்சியிலும் உ. வாசுகி உரையாற்றுகிறார். இதற்காக கியூபா புறப்பட்டுச் செல்லும் உ. வாசுகிக்கு, கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
