பட்டாசுக் கடையில் வெடிவிபத்து
சிவகாசி, அக்.5- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அனுப்பன் குளத்தில் உள்ள தனியார் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏராளமான பட்டாசுகள் எரிந்து சாம்பலாகியது. சிவகாசி அருகேயுள்ளது அனுப்பங்குளம். இங்குள்ள மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவ ருக்குச் சொந்தமான சி.எஸ்.கே பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரு வதை முன்னிட்டு பட்டாசுகளை வாங்க கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர். புதியரக வெடி ஒன்றை வெடித்துக் காண்பிக்க வேண்டுமென வாடிக்கை யாளர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து, கடையில் இருந்த விற்பனையாளர்கள் பட்டாசுகளை வெடித்துக் காட்டி பரிசோதனை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கடை யின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பற்றியது. இதையடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து அனைத்து பட்டாசு களும் வெடிக்கத் தொடங்கின. இதனால் யாரும் கடை யின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சிளித்தது. மேலும் பிரதானச் சாலையில் பட்டாசு கடை இருந்த தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிவகாசி-சாத்தூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் காயம்
தேனி, அக்.5- போடி அருகே சனிக்கிழமை மாலை ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தந்தை மகன் உள்பட 3 பேர் பலத்த காய மடைந்தனர். போடி அருகே அம்மாபட்டி கண்ணன் கோயில் தெரு வில் வசிப்பவர் பொம்மையகவுண்டர் மகன் முருகேசன் (55). இவரது மகன் ரமேஷ் (38). இருவரும் போடியிலி ருந்து ஆட்டோவில் சில்லமரத்துப்பட்டி நோக்கி சென்றுள்ளனர். ஆட்டோவை சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் பாண்டியன் ஓட்டிச் சென்றுள்ளார். வேகமாக சென்றபோது போடி தருமத்துப்பட்டி அருகே நாய் குறுக்கே புகுந்தது. திடீரென பிரேக் போட்ட தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ வில் பயணம் செய்த முருகேசன், ரமேஷ், ஆட்டோ ஓட்டு நர் பாண்டியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் போடி தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோழி பிடித்ததில் தகராறு கத்திகுத்துக்கு ஒருவர் பலி; வாலிபர் கைது
தேனி, அக்.5- தேனி விஸ்வதாஸ் நகரைச் சேர்ந்த தம்பதிகள் முத்தையா மற்றும் முத்துராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணத்திற்கு பிறகு குடும்பத்து டன் வாய்க்கால்பட்டியில் உள்ள முத்துராணி தந்தை வீட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் தேனி விஸ்வதாஸ் நகரில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்தையாவின் தந்தை பாண்டி யை கம்பம் அருகே உள்ள அனுமந்தம்பட்டியை சேர்ந்த நவீன் (25) என்ற இளைஞர் பராமரித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தையாவின் தந்தை பாண்டி உயிரிழந்தார். உயிரிழந்தவருக்கு 16 ஆம் நாள் காரியம் செய்வ தற்காக உறவினர்கள் தேனி விஸ்வதாஸ் நகருக்கு வந்த னர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 12:45 மணி யளவில் முத்தையாவின் இளையமகன் முத்துப்பாண்டி மறைந்த தன் தாத்தா வளர்த்த கோழிகளை பிடித்துள் ளார். இதனை பார்த்த நவீன் முத்துப்பாண்டியை அடித்துள் ளார். இதனைக் கண்ட வீட்டில் இருந்த உறவினர்கள் தடுத்துள்ளனர். இதில் நவீன் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் முத்தையாவை கழுத்துப்பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்தையாவை வீட்டில் இருந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே முத்தையா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து கம்பம் பகுதியில் சுற்றித் திரிந்த நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம்
ஒட்டன்சத்திரம், அக்.5- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில், முகைதீன் ஆண்டவர் தர்கா வில் வருடந்தோறும் நடைபெறும் மத நல்லிணக்க சந்த னக்கூடு உருஸ் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2-ஆம் தேதி வாசனைமாலை ஊர்வலம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களில் ‘அஸா’ எனப்படும் செங்கோல் ஏந்திய இடையக்கோட்டை ஜமீன் பணியா ளர்கள், மேளதாளங்கள் முழங்க, புனிதக் கொடிகளும், நட்சத்திரத்துடன் கூடிய பிறையும், அதில் “786” என அரபி யில் பொறிக்கப்பட்ட அலங்கார சந்தனக்கூடுடன் ஊர்வல மாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பின்னர் இடையக்கோட்டை ஜமீன் பங்களாவில் மத நல்லி ணக்கத்தின் அடையாளமாக பாத்தியா சிறப்பு பிரார்த் தனை மூன்று நாட்கள் நடைபெற்றது. அதன் பின் சந்த னக்கூடு மீண்டும் தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மட்டுமன்றி சென்னை, கோயமுத்தூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்க ணக்கான முஸ்லிம் மக்கள் பங்கேற்றனர்.
3 மாடி கட்டிடம் இடிந்து மூதாட்டி பலி உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
மதுரை, அக்.5- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெமிலா (60 ). இவர் தனது 2 பேரக்குழந்தை களுடன் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்தார். இதனைத் தொடர்ந்து யாகப்பா நகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சனியன்று ஆட்டோ வில் சென்றார். அவர் மற்றும் பேரக்குழந்தைகள் ஆட்டோ வில் அமர்ந்திருந்தபோது, அந்த பகுதியில் இருந்த பழமை யான 3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து ஆட்டோ மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஜெமிலா சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், தவ்ஹீத் சுலை மான்(7) உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, அண்ணாநகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில், கட்டிட உரிமையாளரும், முன்னாள் கவுன்சிலருமான சுசீந்திரன் மீது அலட்சியமாக செயல்படுதல், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இராஜபாளையத்தில் வன உயிரின வார விழா
வன அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி
இராஜபாளையம், அக்.5- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வன உயி ரின வார விழாவை முன்னிட்டு, இராஜபாளையம் வனத் துறையினர் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இராஜபாளையம் வனத் துறை சோதனைச் சாவடியில் இருந்து தொடங்கிய பேரணி, முடங்கியார் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. இதில், வனத்தை பாதுகாப்பது, வனவிலங்குகளை காப்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியை உதவி வன பாதுகாவலர் தங்கப்பழம் தொடங்கி வைத்தார். வன உயிரியியலாளர் பார்த்திபன் பேரணியை நிறைவு செய்தார். இவ்விழா ஏற்பாடுகளை இராஜபாளையம் வனச் சரக அலுவலர் சரண்யா தலைமையில் வன அலு வலர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்