tamilnadu

img

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து பெண் உட்பட இருவர் பலி : 5 பேர் படுகாயம்

பெண்ணின் தாயார் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

மயிலாடுதுறை, செப். 17 - மயிலாடுதுறை சாதி ஆணவக் கொலைச் சம்பவத்தில், பெண்ணின் தாயார் உட்பட 4 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இளைஞர் வைரமுத்துவின் உடலைப் பெற்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் வைரமுத்து (28). இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், மாலினி (26) என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், மாலினியின் தாயார் தூண்டுதலில், அவரது சித்தப்பா மற்றும் தம்பிகள் சேர்ந்து, இளைஞர் வைரமுத்துவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மாலினியின் தாயார் விஜயா பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; வைரமுத்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனிடையே மாலினியின் சகோதரர் குகன் (24), குகனின் நண்பர் அன்புநிதி (19), மாலினியின் சித்தப்பா பாஸ்கர் (42) உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கத்தின் போராட்டத்தை அடுத்து, புதன்கிழமையன்று மாலினியின் தாயார் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட விஜயா (45), குகன் (24), அன்புநிதி (19), பாஸ்கர் (42) ஆகிய 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.  இதையடுத்து, சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின்  உடலைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த உறவினர்கள், உடலை பெற்று அடியமங்கலத்தில் அடக்கம் செய்தனர்.