செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி: 4 பேர் காயம்
தஞ்சாவூர், செப். 9- தஞ்சை அருகே, திங்கட்கிழமை செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரை பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(53). இவர் ஞாயிற்றுக்கிழமை உதாரமங்கலத்தில் இருந்து லாரியில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு பள்ளியக்ரஹாரம் நோக்கி புறப்பட்டார். அவருடன் லாரியில் பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த தர்மன்(50), இளையராஜா (48), அழகர், அம்மன்பேட்டையை சேர்ந்த அமர்சிங் ஆகிய 4 பேரும் வந்தனர். லாரி தஞ்சை அருகே கூடலூர் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியில் வந்த தர்மன், இளையராஜா, அழகர், அமர்சிங் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கஜேந்திரன் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆயிரம் கிலோ கஞ்சா பொருட்கள் எரித்து அழிப்பு
தஞ்சாவூர், செப். 9- தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, அயோத்திப்பட்டியில் மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில், ஆயிரம் கிலோ பொருள்களை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் எரியூட்டி அழித்தனர். தஞ்சாவூர் காவல் சரக்கத்தில் போதை பொருள்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனை எரித்து அழிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் குழித்துறையில் துவக்கம்
குழித்துறை, செப். 9- குமரி மாவட்டம், குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் துவக்கி வைத்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, லலிதா, மினி குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.