tamilnadu

img

மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பழங்குடி மக்கள்

மழை வெள்ளத்தில்  சிக்கித் தவிக்கும் பழங்குடி மக்கள்

திருவண்ணாமலை, அக்.12 –  திருவண்ணாமலை மாவட்டம், தண்ட ராம்பட்டு அருகே வசிப்பதற்குப் பாது காப்பான இடமில்லாததால், நெடுஞ்சாலை ஓரம் வசிக்கும் பழங்குடி மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அருகே உள்ள ராதாபுரம் ஏரிக் கரைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு வீட்டு மனை பட்டா வழங்கியது. வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட சில காலத்தில் அந்த வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப் பட்டன. வசிப்பதற்கு வீடு இல்லாமல் தவிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2024ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் வருவாய்த் துறைக்குக் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கா மல், பழங்குடி மக்களை அல்லல்படுத்தும் வருவாய்த் துறை நிர்வாகத்தைக் கண்டித்து, கடந்த 7அன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், அப்பகுதி மக்கள் தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலி ருந்து மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க நடை பயண இயக்கத்தைத் துவக்கினர். அப்போது அவர்களிடம், தண்டராம்பட்டு வட்டாட்சியர் துரைராஜ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆதியன் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை பழங்குடி மக்களின் வீட்டுமனைக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், ராதாபுரம் கிராம ஏரியின் அருகே நெடுஞ் சாலை ஓரம் தாழ்வான பகுதிகளில் அவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பழங்குடி மக்களின் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியவர் பலர் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அங்கு வசிக்கும் ஆதியன் பழங்குடிக் குடும்பங்க ளுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து, அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.