போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 24- புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதியத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு, எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலர் ஏ. ஸ்ரீதர், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலாளர் ஆர். மணிமாறன், மாவட்டத் தலைவர் க. முதமதலி ஜின்னா உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வேண்டும். 23 மாத கால ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு, ஒப்பந்தப் பலன்கள் உள்ளிட்டவற்றை ஓய்வுபெற்றோருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.