அரசு பூம்புகார் விற்பனை நிலையத்தில் பொம்மைகள் கண்காட்சி
தஞ்சாவூர், ஆக. 10- தஞ்சையில் உள்ள அரசு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிருஷ்ணர் பொம்மைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் 16 ஆம் தேதி வரை கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில், 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக. 10- தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 300 விவசாயிகள் 130 மெட்ரிக் டன் பருத்தியை எடுத்து வந்தனர். செம்பனார் கோவில், ஆக்கூர் முக்கூட்டு, பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் கலந்து கொண்டு பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,817, குறைந்தபட்சம் ரூ.7,109, சராசரி ரூ.7,659 என விலை நிர்ணயித்தனர்.
பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தியவர்கள் கைது
கும்பகோணம், ஆக. 10- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் உட்கோட்டம் திருநீலக்குடி காவல் சரகத்திற்குட்பட்ட சாத்தனூர், வீரசோழனார் பாலத்தின் அருகில், சட்ட விரோதமாக பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திருநீலக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாவுல்ராஜ் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடத்தில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (எ) கீர்த்தி(34), யோகேஷ்(22) மற்றும் மாரியப்பன் விக்கி(22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 300 மதுபாட்டில்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.